திருநெல்வேலி: தமிழ்நாட்டில் அதிக கொலைகள் நடைபெறும் மாவட்டங்களின் பட்டியலில் திருநெல்வேலி மாவட்டம் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இன்றளவும் சாதிய ரீதியான பல கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த 9ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரை, சக மாணவர்கள் மூன்று பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது வீட்டிலிருந்த மாணவனின் தங்கை தடுக்க சென்றபோது அவருக்கும் வெட்டு விழுந்துள்ளது. இதுமட்டும் இன்றி மாணவனின் தாயையும் மூன்று பேரும் காலால் எட்டி உதைத்துத் தள்ளி உள்ளனர்.
இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அடுத்தடுத்து நடைபெறும் கொலைச் சம்பவங்களால் திருநெல்வேலி பதற்றமாகி காணப்படுகிறது. குறிப்பாக கடந்த ஜூலை மாதம் தொடங்கி தற்போது வரை திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மொத்தம் 11 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கீழ நத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜா மணி கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி, இசக்கி ஆகிய இரண்டு நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட ராஜா மணி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். மேலும் திமுகவைச் சேர்ந்த ராஜா மணி கீழ நத்தம் பஞ்சாயத்தில் உறுப்பினராகவும் உள்ளார். எனவே இந்த கொலைக்குப் பின்னணியிலும் சாதி மோதல் இருப்பதாக கூறப்படுகிறது.