திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ள நிலையில் தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மேயர் சரவணன் நிறைவேற்றித் தருவதில்லை என ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சி மன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது ஊழல் குற்றச்சாட்டை முன் வைப்பது எனத் தொடர்ச்சியாக மேயர் கவுன்சர்களிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இது போன்ற சூழ்நிலையில் இன்று(நவ.21) மாநகராட்சியில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் சென்றிருந்தனர். ஆனால் முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மனுவுடன் மாநகராட்சி அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்குப் பரபரப்பான சூழல் நிலவியது. குடிநீர் பிரச்சினை, சாலை பிரச்சனை உட்பட மக்களின் பிரச்சினைக்கு மேயர் குரல் கொடுப்பதில்லை என்றும் மேயர் கவுன்சிலர்களை மதிக்காமல் நடந்து கொள்வதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் பல வார்டுகளில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கண்டன கோஷம் எழுப்பியதையடுத்து, அங்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையர் தானு மூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.