Nellai Gun Practise issue:நெல்லை: இளைஞருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியளித்த விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், போலீசாரிடம் சரணடைந்த பிரபல ரவுடி வெள்ளை சுந்தர் நெல்லை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடினார். இந்நிலையில், அவரை டெல்லியில் கைது செய்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்துள்ளனர். விரைவில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மகாராஜா நகரைச் சேர்ந்தவர், வெள்ளை சுந்தர். தென் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் கூட்டாளியாக வெள்ளை சுந்தர் இருப்பதாகவும், இவர் மீது சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளை சுந்தர் தனது உறவினரான அஜய் கோபி என்ற இளைஞருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
போலீசாரின் விசாரணையில் அந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்த போதிலும், பழைய வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பரவ விட்டு பொதுமக்கள் மத்தியில் ஆயுத கலாசாரத்தை தூண்டியதாக நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் கோபியை கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த வெள்ளை சுந்தர் தலைமறைவாகியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி அவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வந்தார். அப்போது, வெள்ளை சுந்தர் கடும் போலீசாரின் பாதுகாப்பை மீறி நீதிமன்றத்தில் இருந்து திடீரென தப்பி ஓடிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
மேலும், நூற்றுக்கணக்கான போலீசார் நடமாடும் நீதிமன்ற வளாகத்தில் முக்கிய வழக்கின் குற்றவாளி சாதாரணமாக தப்பிச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வாசிவம் தான், குற்றவாளி வெள்ளை சுந்தரை தப்பவிட்டதாக கூறப்பட்டது.