திருநெல்வேலி மாநகரின் பழைய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம், கடந்த 2018ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் வணிக வளாகங்கள் மற்றும் பார்க்கிங் வசதியுடன் நவீன பேருந்து நிலையமாக 78 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 80% பணிகள் முடிவுற்ற நிலையில், பேருந்து நிலைய கட்டுமான பணியில் அஸ்திவாரம் தோண்டும்போது எடுக்கப்பட்ட மண்ணை விற்பனை செய்வதில், சமூக ஆர்வலர் சுடலைக்கண்ணு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிமன்றம், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும்படி உத்தரவிட்டது. எனவே தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றம் சார்பில் புவியியல் வல்லுநரும் வழக்கறிஞருமான கே.கலைவாணன் ஆணையாளராக நியமிக்கப்பட்டு, அவர் மூலம் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் டன் கணக்கில் மணல், மலை போல் குவிக்கப்பட்டிருந்தது. இதனால் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் இறுதி நிலையில் தொடர முடியாமலும், அதனால் பேருந்து நிலையம் திறக்க முடியாத நிலையிலும் உள்ளது.