திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் மாநகர்ப் பகுதியில் மத்திய அரசின் சீர்மிகு நகர் திட்டத்தின்கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில், மாநகரில் விடுபட்ட பகுதிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
அதற்காக, பணியினை ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் நகரின் பல்வேறு தெருக்களில் பள்ளங்கள் தோண்டி குழாய்கள் அமைத்துவருகின்றனர்.
ஆனால் தோண்டப்படும் பள்ளங்களை உடனடியாக மூடி சரிசெய்யாமல் ஒப்பந்தக்காரர்கள் அலட்சியமாக விட்டுவிட்டுச் செல்வதால் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மேட்டுத் தெருவில் ஒரு நபர் மிதிவண்டியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மந்திரமூர்த்தி என்பவர் வீடாகச் சென்று செய்தித்தாள்கள் போடும் வேலைபார்த்து வருகிறார். நேற்று (ஏப். 14) காலை வழக்கம்போல் மந்திரமூர்த்தி மேட்டுத்தெரு பகுதியில் செய்தித்தாள் போடுவததற்காகச் சென்றபோது சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகில் மெதுவாகச் சென்றபோது திடீரென நிலைதடுமாறி சுமார் ஆறு அடி நீளம் உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரைப் பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக மந்திரமூர்த்திக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லாமல் உயிர் தப்பினார்.
இருப்பினும் மாநகராட்சி, ஒப்பந்தக்காரர்களின் அலட்சியத்தால் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாதாள சாக்கடையில் விழும் நபர் இதற்கிடையில் மந்திரமூர்த்தி பள்ளத்தில் விழுந்தது அருகில் இருந்த வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் தற்போது அந்தப் பள்ளத்தை மூடி சரிசெய்தனர். பொதுமக்களின் நலன்கருதி இதுபோன்று தோண்டப்படும் பள்ளங்களை உடனடியாகச் சரிசெய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:மாட்டிக்கிச்சு... மாட்டிக்கிச்சு... பாதள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய மாநகரப் பேருந்து!