தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடையடைப்பது தொடர்பாக காவல்துறையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெனிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், விசாரணை கைதிகளாக சிறையில் இருக்கும்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் தாக்குதலில்தான் இருவரும் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள், ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடல்களையும் உடற்கூறாய்வு சோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இந்நிலையில் 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் வீடியோ பதிவுடன் நீதிபதி முன்னிலையில் உடற்கூறாய்வு நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தற்போது சாத்தான்குளத்தில் இருந்து உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, அவரது மகள் ஜெர்சி, உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
இதைத் தொடர்ந்து கோவில்பட்டி நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் விசாரணைக்கு பிறகு உடற்கூறாய்வு நடைபெற இருந்தது. இந்நிலையில், உடற்கூறாய்வு தொடங்குவதற்கு முன்னரே நிறுத்திவைக்கப்பட்டது. இது குறித்து ஜெயராஜ் குடும்பத்தினர் தரப்பில் கூறுகையில், “அரசு மருத்துவர்களுக்கு பதிலாக நாங்கள் நியமிக்கும் தனியார் மருத்துவர்கள், எங்களது தனிப்பட்ட கேமரா மேன்களை வைத்து உடற்கூறாய்வு நடத்தினால்தான் உடலை வாங்குவோம்” என்றனர்.
சிறையில் உயிரிழந்த தந்தை -மகன் உடற்கூறாய்வில் தாமதம் இதனால் இன்றும் உடற்கூறாய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது தங்களது கோரிக்கையை உறவினர்கள் மனுவாக எழுதி நீதிபதியிடம் கொடுக்க சென்றுள்ளனர். இந்தக் கோரிக்கையை நீதிபதி பாரதிதாசன் ஏற்கும் பட்சத்தில் அதன் பிறகுதான் உடற்கூறாய்வு நடக்கும் என்று தெரிகிறது. தற்போது மருத்துவமனையில் உறவினர்கள் மற்றும் காவலர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவிவருகிறது.
இதையும் படிங்க: தந்தை - மகன் இறந்த வழக்கில் டிஜிபி, எஸ்பி ஆஜராக உத்தரவு