தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tirunelveli Mayor: "நெல்லை மாநகராட்சியில் 25% கமிஷன்" மேயருக்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு! - நெல்லை திமுக

நெல்லை மாநகராட்சியில் திமுகவினரிடையே உட்கட்சிப் பூசல் தலைவிரித்தாடும் நிலையில், நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 25 சதவீதம் கமிஷன் வாங்கி கல்லா நிரப்ப துடிக்கும் மேயர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posters
கல்லா

By

Published : Jun 14, 2023, 2:01 PM IST

நெல்லை: நெல்லை மாநகராட்சியில் திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக உள்ளார். மொத்தம் 55 வார்டுகளைக் கொண்ட நெல்லை மாநகராட்சியில் 49 வார்டுகளில் திமுகவைச் சேர்ந்தவர்களே கவுன்சிலராக உள்ளனர். ஆளுங்கட்சி மெஜாரிட்டி உறுப்பினர்களை கொண்டிருப்பதால் எதிர்க்கட்சியின் தலையீடு இல்லாமல் மக்கள் பணிகள் முறையாக நடைபெறும் என நெல்லை மாநகர மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அதற்கு மாறாக நெல்லை மாநகர திமுகவில் நடைபெறும் உள்கட்சி பூசல் காரணமாக மேயருக்கும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. குறிப்பாக, நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்த அப்துல் வகாப் எம்எல்ஏ தனது ஆதரவு கவுன்சிலர்கள் மூலம் மேயர் சரவணனுக்கு எதிராக மாமன்ற கூட்டங்களில் குரல் எழுப்ப வைத்தார். அதேபோல், மேயர் சரவணன் தனக்கு வேண்டிய சில திமுக நிர்வாகிகளை கையில் வைத்துக் கொண்டு மாநகராட்சி திட்ட பணிகளில் முறைகேடு செய்வதாகவும் புகார் எழுந்தது.

பெரும்பாலான கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக செயல்பட்டு வருவதால், அவர்களின் வாடுகளில் மக்கள் பணிகள் சரிவர நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், ஒப்பந்ததாரர்களிடம் சதவீத அடிப்படையில் மேயர் கமிஷன் பெறுவதாகவும், அந்த கமிஷனை அனைத்து கவுன்சிலர்களுக்கும் சமமாக வழங்காமல், அவர் மட்டுமே வைத்துக் கொள்வதாகவும், ஆளுங்கட்சி கவுன்சிலர்களே புகார் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஆறாவது வார்டைச் சேர்ந்த கவுன்சிலர் பவுல்ராஜ் அண்மையில் வெளியிட்ட ஆடியோவில், அனைவருக்கும் கமிஷனை பகிர்ந்து அளிக்க வேண்டும், இல்லாவிட்டால் மேயரை மாற்ற நேரிடும் என்று எச்சரித்து பேசி இருந்தார். இதனால், மேயர் சரவணன் மக்கள் பணியைக் காட்டிலும் உள்கட்சி பூசலை சமாளிப்பதற்கே பெரும்பாலான நேரங்களை செலவிடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக மாநகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், "தமிழக அரசே, தமிழக அரசே, 25 சதவீதம் கமிஷன் வாங்கி கல்லா நிரப்ப துடிக்கும் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் மீது உடனடியாக நடவடிக்கை எடு. ஊழலால் முடங்கி கிடக்கும் மக்கள் பணிகளை உடனடியாக தொடங்கிட நடவடிக்கை எடு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே ஊழல் புகார் கூறி வரும் சூழலில், சமூக அலுவலர் என்ற பெயரில் நம்பிக்குமார் என்பவர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர், நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் தலைவிரித்தாடிய திமுக உட்கட்சிப் பூசல்; அதிரடி நடவடிக்கை எடுத்த கட்சித் தலைமை - முழுப் பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details