திருநெல்வேலி:சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன், மன்னர் எனப் பல்வேறு சிறப்புகளைக்கொண்ட அழகு முத்துக்கோன் குருபூஜை தினம் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் உள்ள அழகுமுத்துக் கோன் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இன்று அழகு முத்துக்கோன் குருபூஜை தினத்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குறிப்பாக யாதவ மகாசபையைச் சேர்ந்த இளைஞர் அணி தலைவர் பொட்டல் துரை, தனது மாலையினை அணிவிக்க வந்தபோது அவரது ஆதரவாளர்கள் 20க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஒலி எழுப்பியபடி, காரின் மேல் பகுதியில் அமர்ந்த படியும் கார் கதவுகளை திறந்துவிட்ட படியும் அனல் பறக்க விசில் அடித்துக்கொண்டு பேரணியாக வந்தனர்.
அதேசமயம், காரில் அதிக ஒலி எழுப்பி வரக்கூடாது; காரின் மேல் பகுதியில் அமர்ந்து செல்லக்கூடாது; பேரணி செல்லக்கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்திருந்தது. மேலும், முன்னெச்சரிக்கையாக அழகு முத்துக்கோன் சிலை அமைந்துள்ள பகுதியில் நெல்லை மாநகர காவல் துறை சார்பில் துணை ஆணையர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
பொட்டல் துரை ஆதரவாளர்கள் விதிகளைமீறி பேரணியாக வந்ததை அறிந்த காவல் துறையினர் அவர்களை அதிரடியாக தடுத்து நிறுத்தினர். மேலும், 5க்கும் மேற்பட்ட கார்களில் சாவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர் இதனால் ஆத்திரமடைந்த பொட்டல் துரை ஆதரவாளர்கள் காவல் துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.