திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் மது வாங்கிச் சென்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் வேலா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவரை பிரிந்து வாழும் வேலா, கட்ட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது இரண்டு மகன்களும் பெயிண்டர் தொழில் செய்து வருகின்றனர். வேலாவின் மூத்த மகன் நாகர்கோவில் பகுதியில் பணி செய்து வருகிறார்.
இளைய மகன் பார்வதி நாதன் (வயது 22) நெல்லையில் உள்ள கட்டிட பணிகளுக்கு பெயிண்டிங் தொழிலுக்கு சென்று வருகிறார். நேற்று (ஆகஸ்ட். 21) இரவு பார்வதிநாதன், பெங்களூருவுக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த நண்பர் ஒருவர் மது அருந்துவதற்கு அழைத்த நிலையில் மது பாட்டில் வாங்குவதற்காக கிருஷ்ணாபுரம் ஆதிபராசக்தி நகர் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி விட்டு தனியாக வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை குருநானக் கல்லூரியில் 18 மாணவர்கள் டிஸ்மிஸ்.. வெடி விவகாரத்தில் காவல்துறை விளக்கம் என்ன?
அப்போது அங்க வந்த மர்மநபர்கள் பார்வதி நாதனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து பார்வதி நாதன் உயிரிழந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் சிவந்திபட்டி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கொலை நடந்த இடத்தில் நெல்லை ஊரக உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டு தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். ஏற்கனவே பார்வதி நாதன் மற்றும் அவரது நண்பர்களுக்கு இடையே இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பார்வதி நாதனின் நண்பர்கள் சிவந்திபட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவமும் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் தொடர் கொலைகள் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பல்க் ஆர்டர் எனக் கூறி ரூ.43 லட்சம் மோசடி... 3 வருடங்களாக போராடும் முந்திரி வியாபாரி.. பிளாட்பாரத்தில் பிழைப்பு நடத்தும் அவலம்!