நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் 6ஆம் எண் சாலையில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப். 5) அந்தச் சாலை வழியாக இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸ் சென்றுள்ளனர்.
அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நடமாடும் தெருக்களில் இதுபோன்று பைக் ரேஸ் நடத்தக்கூடாது என அந்த இளைஞர்களைப் பிடித்து அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (செப்.6) அந்த இளைஞர்கள் மீண்டும் அந்தச் சாலையில் தங்களைத் தடுத்த பொதுமக்களின் கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த மக்கள் அந்த இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின்பேரில், அம்பை காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பிறகு, பைக் ரேஸ் சென்ற 20 பேரையும், மக்கள் தரப்பில் ஐந்து பேரையும் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அப்பகுதியில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.