நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்திலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தென்மண்டல காவல்துறைத் தலைவர் முருகன், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் குற்றச் சம்பவங்கள் குறித்தும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
குறிப்பாக, சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடி கனதுரைமுத்துவைப் பிடிக்கச் சென்றபோது காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்தும், அந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
மேலும் தமிழ்நாட்டில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் தென்மண்டலத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
முன்னதாக, தென்காசி மாவட்டத்தில் தென்மண்டலகாவல்துறைத் தலைவர் முருகன் தலைமையில் காவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது