திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நம்பி நகரைச் சேர்ந்த கண்ணன் என்ற கபாலி கண்ணன் (52), அதே ஊரைச் சார்ந்த வானுமாமலை (62) என்பவரை நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வைத்து அரிவாளால் வெட்டி உள்ளார்.
இது தொடர்பாக நாங்குநேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக, ஜூலை 31ஆம் தேதி அதே ஊரைச் சார்ந்த 9 நபர்கள் ஒன்றாக சேர்ந்து நம்பி நகரில் உள்ள கபாலி கண்ணனின் தோட்டத்தில் இருந்த வேலிக் கற்களை உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாகவும், நாங்குநேரி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பழி வாங்கும் நோக்கமாக கபாலி கண்ணனின் மகன் நவீன்(23) மற்றும் அவரது 6 நண்பர்கள் நேற்று (ஆகஸ்ட் 12) மாலை நம்பி நகரில் உள்ள வானுமாமலையின் வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எரிந்துள்ளனர். இதில் வீட்டிலிருந்த ஷோபா மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் ஆகியவை நொறுங்கி உள்ளது.
மேலும் இது குறித்து நாங்குநேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முன் விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நாங்குநேரியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.