திருநெல்வேலி:நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிச.16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால், பல இடங்களில் சாலைகள், பாலங்கள், வீடுகள் போன்றவை சேதமடைந்துள்ளது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள பிரதான சுற்றுலாத்தலமான மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்குச் செல்லும் சாலை மழையால் மிகவும் சேதமடைந்தது.
ஏற்கனவே, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாஞ்சோலை செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட மழையால் மண்சரிவு ஏற்பட்டு, சாலை முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வாகனங்கள் மேலே செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது.
மேலும், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி முதல் மாஞ்சோலை பகுதிக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. மேலும் வனத்துறையினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வாகனத்தில், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சென்று வந்தனர்.
இந்த வாகனத்தில் 150 முதல் 250 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து, நேரில் பார்வையிட்ட சேரன்மாகதேவி சார் ஆட்சியர், பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை வனத்துறை வாகனத்தில் 25 முதல் 35 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் எனக் கூறிச் சென்றுள்ளார். அதன் பின்னர் வனத்துறை வாகனமும் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மீண்டும் பேருந்துகள் இயக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், நேற்று மாஞ்சோலைக்கு பேருந்து சோதனை ஓட்டமாக தொடங்கப்பட்டது. ஆனால், செல்லும் வழியில் சேறும் சகதியுமாக உள்ளதால், பேருந்தை இயக்க முடியவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக மதியம் 2 மணியளவில், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, இரவு 10 மணி அளவில் கீழே வந்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சாலையை சீரமைத்து பின்னர்தான் பேருந்தை இயக்க முடியும். இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்” என தெரிவித்தனர். பேருந்து சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில், தார்சாலை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னையில் 47வது சர்வதேச புத்தக கண்காட்சி..பணிகளை ஆய்வு செய்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்!