தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“உயிரைத் தவிர ஒன்றுமே இல்லை; புத்தகங்கள் இல்லை.. கல்லூரி கட்டணமும் இல்லை” நெல்லை மக்களின் கண்ணீர் புலம்பல்! - தென் மாவட்டங்களில் மழை

Nellai peoples have lost their belongings: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுதிகளில் தமிழக அரசு முகாமிட்டு, பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

nellai peoples have lost their belongings
உயிரைத் தவிர ஒன்றுமே இல்லை, எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.. நெல்லை மக்களின் கண்ணீர் புலம்பல்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 7:49 PM IST

Updated : Dec 19, 2023, 8:56 PM IST

உயிரைத் தவிர ஒன்றுமே இல்லை, எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.. நெல்லை மக்களின் கண்ணீர் புலம்பல்..

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத பெருமழை காரணமாக மாவட்டம் முழுவதும் கடும் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி நள்ளிரவு தொடங்கிய கனமழை 17ஆம் தேதி இரவு வரை சுமார் 35 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து 17ஆம் தேதி பகல் முழுவதும் மிதமான மழை நீடித்துக் கொண்டே இருந்தது.

இதன் காரணமாக நெல்லை, பாபநாசம், மணிமுத்தாறு போன்ற அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் பல்லாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பாக, நேற்று (டிச.18) ஒரே நாளில் தாமிரபரணி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் சென்றதால், மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளான கொக்கரக்குளம், வண்ணாரப்பேட்டை, சுத்தமல்லி, மேலப்பாளையம், நெல்லை சந்திப்பு, உடையார்பட்டி, மணி மூர்த்தீஸ்வரம், தச்சநல்லூர் போன்ற பகுதிகள் கடுமையான வெள்ள பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. தற்போது மழைநீர் வடியத் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் தங்களது உடைமைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரம், நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள பெரும்பாலான வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் முற்றிலும் சேதமானதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. கீழ் தளத்தில் வசித்த மக்கள், உயிருக்குப் பயந்து மேல் தளங்களுக்குச் சென்று தஞ்சம் அடைந்தனர். மாடி வீடு இல்லாத நபர்கள் அருகில் இருந்த நபர்களிடம் உதவி கேட்டு, அவர்களின் வீடுகளுக்குச் சென்று தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலையில், இன்று (டிச.19) உடையார்பட்டி பகுதியில் மழைநீர் முற்றிலுமாக வடிந்தது. இதை அடுத்து, உடையார்பட்டி சிந்திப்பூந்துறை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று உடைமைகளைப் பார்த்த போது அவை அனைத்தும் மழை வெள்ளத்தில் சேதம் அடைந்ததைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட உடையார்பட்டி சிந்து பூந்துறை பகுதி மக்கள் கூறுகையில், "16ஆம் தேதி இரவு எங்கள் பகுதிக்குள் தண்ணீர் வரத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மிக அதிக அளவு தண்ணீர் வீடுகளைச் சூழ்ந்தது. இருந்த போதிலும், எங்களுக்கு யாரும் உதவ முன் வரவில்லை. எங்கள் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களே எங்களுக்கு உதவி செய்தார்கள். அதிகாரிகள் எல்லாரும் மெயின் ரோட்டில் மட்டுமே பார்வையிட்டனர். தெருக்களுக்குள் வந்து பாதிப்புகளை யாருமே ஆய்வு செய்யவில்லை.

இவ்வளவு தண்ணீர் வரும் என முன்கூட்டியே எங்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போது வீட்டில் உள்ள எங்களது உடைமைகள் அனைத்தும் சேதமாகிவிட்டது. உயிரைத் தவிர ஒன்றுமே இல்லை, எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் சென்று விட்டது. எனவே, தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கண்ணீர் மல்கக் கோரிகையைத் தெரிவித்தனர்.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சிவ சக்தி கூறும்போது, "எங்களது வீடு முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால், எனது பள்ளி புத்தகங்கள் எல்லாம் வெள்ளத்தில் சென்று விட்டது. மேலும் பள்ளியில் தேர்வு நடைபெறுகிறது, அந்த தேர்விற்கு நான் எப்படிப் படிப்பேன் என்றே தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

சிந்து பூந்துறையைச் சேர்ந்த செந்தூர மோகன் கூறும்போது, "இந்த வெள்ளத்தில் எனது வீட்டிலிருந்து அனைத்து பொருட்களும் சேதம் ஆகிவிட்டது. எனது மகன் கல்லூரி கட்டணத்திற்காக வைத்திருந்த பணம் முதற்கொண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது, பெரும் கஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்த மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வர தங்களுக்கு இரண்டு மாதமாகும் என தெரிவிக்கும் மக்கள், தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு, பொது மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்பதை இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:150 ஏக்கர் நெற்பயிர்களை சுருட்டிச் சென்ற வெள்ளம்... நிர்கதியாக நிற்கும் நெல்லை விவசாயிகள்!

Last Updated : Dec 19, 2023, 8:56 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details