தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய மோட்டார் வாகன சட்டம் அமல் - அதிக அபராதத்தால் மக்கள் அவதி - சாலை வசதிகளை மேம்படுத்த மக்கள் கோரிக்கை

திருநெல்வேலியில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர், சாலை விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலித்து வரும் நிலையில் சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் இது போன்று பத்து மடங்கு அபராத தொகை வசூலிப்பது எப்படி நியாயம் என மக்கள் புலம்புகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 26, 2022, 4:12 PM IST

திருநெல்வேலி:நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படும் நிலையில் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தைத் தமிழ்நாடு அரசு அமல்படுத்தி அதற்கான அரசாணையும் சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து காவல் துறையினர், சாலை விதிகளை மீறுவோர் மீது புதிய சட்டத்தின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட அபராத தொகையை வசூலித்து வருகின்றனர்.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (அக்.26) முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகில் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இன்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைக்கவசம் அணியாமல் செல்வது, அதிக வேகத்தில் செல்வது உள்படச் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து புதிய சட்டத்தின்படி 10 மடங்கு உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதன்படி தலைக்கவசம் அணியாத வாகன ஒட்டிகளிடம் 100 ரூபாய்க்கு பதில் ஆயிரம் ரூபாயும், ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய்க்கு பதில் 5 ஆயிரம் ரூபாயும் அதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி இரண்டாவது முறையாகச் சிக்கும் நபர்களிடம் 15 ஆயிரம் ரூபாய், இன்சூரன்ஸ் இல்லாத வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய்க்கு பதில் 5 ஆயிரம் ரூபாயும் அதிவேகமாக ஓட்டும் கனரக வாகன ஓட்டிகளிடம் 4ஆயிரம் ரூபாய் என புதிய அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

ஏற்கனவே தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தால் ஏற்பட்ட அதிக செலவினத்தைத் தாக்குப் பிடிக்க முடியாத ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பண்டிகை முடிந்த கையோடு திடீரென பத்து மடங்கு அபராதம் வசூலித்ததால் அதிர்ச்சியடைந்தனர். சாலை விபத்துக்களைத் தடுக்க இதுபோன்ற விதிமுறைகளைக் கடுமையாக்குவது தவறில்லை என்றாலும், அதற்கேற்ப சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் இது போன்று பத்து மடங்கு அபராத தொகை வசூலிப்பது எப்படி நியாயம் என்று புலம்பியபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

அதிக அபராதத்தால் மக்கள் அவதி

இதையும் படிங்க:சென்னைக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம் : தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

ABOUT THE AUTHOR

...view details