தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு! - vande bharat train from nellai to chennai

Chennai to Nellai Vande Bharat Express: நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கிய நிலையில், குறுகிய நேரத்தில் இனி சென்னைக்கு பயனிக்கலாம் என பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தென் தமிழநாட்டின் முதல் வந்தே பாரத்
தென் தமிழநாட்டின் முதல் வந்தே பாரத்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 5:01 PM IST

Updated : Sep 24, 2023, 5:15 PM IST

தென் தமிழநாட்டின் முதல் வந்தே பாரத்

திருநெல்வேலி:தென் மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை டெல்லியில் இருந்தபடி காணொளிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். நெல்லை உள்பட நாடு முழுவதும் ஒன்பது நகரங்களுக்கு இன்று வந்தே பாரத்தின் சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல்.முருகன், நெல்லை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

வந்தே பாரத்தின் முதல் துவக்க நாள் என்பதனால், ரயில்வே ஊழியர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கும் கட்டணமின்றி பாஸ் வழங்கப்பட்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். வந்தே பாரத் ரயிலில் பயணிக்க முன்னதாகவே அனுமதி பெற்றிருந்தவர்கள், காலை 10 மணி முதல் ஆர்வமுடன் வருகை தந்தனர். துவக்க விழாவை முன்னிட்டு வந்தே பாரத் ரயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதிநவீன வசதிகள் மற்றும் குறுகிய நேரப் பயணம் என்பதால் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள வந்தே பாரத் ரயில், முன்னதாக தமிழகத்தில் சென்னை - கோவை மற்றும் சென்னை - மைசூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது ரயிலாக நெல்லை - சென்னை இடையே தனது சேவையை தொடங்கியுள்ளது.

வழக்கமாக நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில், வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர்த்து, மீதமுள்ள ஆறு நாட்களிலும் தினந்தோறும் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை சென்றடையும் வகையிலும், மறுமார்க்கமாக சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 10.40 மணிக்கு வந்தடையும் வகையிலும் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி இன்று (செப்.24) கொடியசைத்து, தமிழ்நாட்டில் வந்தே பாரத்தின் மூன்றாவது சேவையை துவக்கி வைத்தார். பிற்பகல் 12.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத், மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இரவு 7.50 மணியளவில் சென்னையை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏசி நிறைந்த நவீன இருக்கைகள், கேமராக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு வசதிகள், மொபைல் சார்ஜிங் போன்ற ஏறாளமான வசதிகள் உள்ளன.

கட்டணங்களைப் பொறுத்தவரையில் சாதாரண ஏசி சேர் கார் இருக்கை மற்றும் எக்ஸிகியூட்டிவ் கேர் என இரண்டாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் சாதாரண ஏசி இருக்கைக்கு உணவுக் கட்டணம், முன்பதிவு கட்டணம், ஜிஎஸ்டி உள்பட ஆயிரத்து 610 ரூபாய் என்றும், எக்ஸகியூட்டிவ் கேர் பெட்டியில் பயணம் செய்வதற்கு உணவுக் கட்டணம், ஜிஎஸ்டி, முன்பதிவுக் கட்டணம் மூவாயிரத்து ஐந்து (3,005) ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து இன்று (செப்.24) பிற்பகல் 12.45 மணியளவில் புறப்பட்ட வந்தே பாரத் ரயில், இரவு 7.50 மணியளவில் சென்னை சென்றடையும். மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் நின்று செல்லும். முதல் நாள் என்பதால் மேற்கண்ட ரயில் நிலையங்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அதிக வரவேற்பு கொடுக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் நாளை சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு பயணிகளுடன் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடையும். இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி முடிவடைந்தது. தொடர்ந்து நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிக்காக ரயில் இயக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் புதன்கிழமை முதல் திட்டமிட்டபடி வாரத்தில் ஆறு நாட்களுக்கு நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில், இரு மார்க்கமாக இயக்கப்பட இருக்கிறது. தென்மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக வந்தே பாரத் ரயில் அமைந்திருப்பதாகவும், விமானத்தை ஒப்பிடும்போது இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தேசிய அளவில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டம், இவ்வளவு சீக்கிரம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என பயணிகள் நெகிழ்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:Nellai - Chennai Vande Bharat Train : நாட்டில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி துவக்கி வைப்பு!

Last Updated : Sep 24, 2023, 5:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details