திருநெல்வேலி:கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீ ரெங்கநாராயணபுரத்தைச் சேர்ந்தவர்கள் தங்கராஜா - சுகந்தி தம்பதி. இவர்களது மகன் முருகன் (24). டிப்ளமோ பட்டதாரியான இவர், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் முருகேசன் - பத்மா தம்பதி வசித்து வருகின்றனர்.
இவர்களது மகளான சுமிகா (19), தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வருகிறார். முருகனும், சுமிகாவும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர, அதற்கு சுமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனவே கடந்த ஜனவரி 18ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சுமிகா, காதலர் முருகனுடன் சென்னை சென்று பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனிடையே சுமிகாவின் தந்தை முருகேசன், தனது மகளை காணவில்லை என கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது மட்டுமில்லாமல், அவர் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
இதனையடுத்து முருகன் - சுமிகா இருவரையும் மீட்ட காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அப்போது தான் முருகனுடன் செல்வதாக சுமிகா கூறி உள்ளார். பின்னர் இருவரும் கூடங்குளத்தில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீ ரெங்கநாராயணபுரத்தில் உள்ள வீட்டுக்கு தனது மகள் வந்ததை அறிந்த சுமிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அங்கு சென்று சுமிகாவை தாக்கி இழுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் அதனை தடுக்க வந்த முருகன் மற்றும் அவரது பெற்றோரையும் தாக்கி அவதூறாக பேசியவிட்டு, சுமிகாவை காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இது தொடர்பாக முருகன், கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.