திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பாபநாசம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த வனத்துக்கு நடுவே காரையாறு, மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் பொதிகை மலையில் இருந்து பாய்ந்தோடும் தண்ணீர் மேற்கண்ட அணைகளைத் தழுவி தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.
இந்த தாமிரபரணி ஆறு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவதோடு, விவசாய தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், ஆரம்பத்தில் மலைப்பகுதியில் போதிய மழை பெய்யாததால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லாமல் இருந்தது.
இந்த சூழ்நிலையில் தான், கடந்த டிசம்பர் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிக அதிகனமழை கொட்டி தீர்த்தது. இந்த பெருமழையால் அதுவரை நிரம்பாமல் இருந்த காரையாறு, மணிமுத்தாறு ஆகிய பெரிய அணைகள் உள்பட அனைத்து அணைகளும் நிரம்பி மறுகால் வரை பாய்ந்தது.
மேலும் வரலாறு காணாத இந்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் பல லட்சம் கன அடி தண்ணீர் பாய்ந்தது. இதனால் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ளத்திற்கு பிறகும் தொடர்ந்து மலைப்பகுதியில் அவ்வப்போது மிதமான மழை நீடித்து வருகிறது.
குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு மீண்டும் கனமழை பெய்ததால், 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம், கடந்த பல நாட்களாக 142 அடியில் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.