திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்.69/2023 என்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி பல்வீர் சிங், அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் புகார்கள் வெளியாகின. இது தொடர்பாகக் காவல் நிலை ஆணை 151ன் கீழ் சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவர், சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள மார்ச் 26ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில், பல்வீர்சிங், மார்ச்.29 ஆம் தேதியன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த ராஜ்குமார், முதல்நிலைக் காவலர், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையம், போகபூமன், காவலர், வி.கே.புரம் காவல்நிலையம், சந்திரசேகரன், காவல் ஆய்வாளர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம், திருமதி பி.ராஜகுமாரி, கல்லிடைக்குறிச்சி வட்டக் காவல் ஆய்வாளர், ஏ.பெருமாள், வி.கே.புரம் வட்டக் காவல் ஆய்வாளர், என்.சக்தி நடராஜன், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட சார்-ஆய்வாளர், எம்.சந்தானகுமார், தலைமைக் காவலர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம், வி.மணிகண்டன், முதல்நிலை காவலர், அம்பாசமுத்திரம் காவல் நிலையம் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி புகார்கள் தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மார்ச். 26ஆம் தேதி உத்தரவிட்டதற்கு இணங்க, சேரன்மகாதேவி உட்கோட்ட சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு, தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு ஏப்.03 ஆம் தேதியன்று சமர்ப்பித்தார்.