திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் டிச.13 முதல் பெய்த அதிக கனமழையின் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மாநகரின் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள சிந்துப் பூந்துறை சமீபத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சிந்துப்பூந்துறையை ஒட்டி அமைந்துள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள குடியிறுப்புகளுக்கு மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து படிப்படியாக, அப்பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று அங்கு மின்சாரம் வழக்கம்போல வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வெள்ளத்தில் வீணாக போன உடமைகள் அனைத்தையும் சீரமைப்பதற்காக வீட்டை புனரமைக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வந்தனர்.
அதன்படி, அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(52) என்பவர், தனது வீட்டை சுத்தம் செய்யும்போது, சுவிட்சை தொட்ட நிலையில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிக கனமழை கொட்டித்தீர்த்தது. சராசரியாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையையொட்டி தான், தென்மாவட்டங்களில் மழை பெய்யும். ஆனால், இந்த முறை டிசம்பர் மாதம் பெய்த அதிக கனமழையால் திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு தென்மாவட்டங்கள் பெருவெள்ளத்தால் புரட்டிப்போடப்பட்டன.
அவ்வாறு டிசம்பர் 16ஆம் தேதி நள்ளிரவு தொடங்கிய மழை, 18ஆம் தேதிவரை சுமார் 35 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால், நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. அதனை அடுத்து அனைத்து அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, வீடுகளில் பராமரிப்பு பணிகளில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்; மின்சாரம் எளிதில் தாக்கக்கூடிய வகையில், அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். குறிப்பாக, இதுபோன்ற நிலையில், வீட்டில் உள்ள சிறுவர் சிறுமியர்களை இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத்த வேண்டாம்.
இதையும் படிங்க:வெள்ள நிவாரணம் வழங்குவதில் தகராறு! ரேசன் கடை ஊழியருக்கு வெட்டு! விபரீதத்திற்கு என்ன காரணம்?