தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. அதேபோல் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இரு கரைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “நெல்லை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்களை பாதுகாக்கும் வகையில் முகாம்கள் அமைக்க 188 அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலோர பகுதிகளில் 7 உயர் சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.