தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2000 வருடத்திற்கு முன்பே நெல்லையில் இரும்பு உருக்கு ஆலைகள்.. துலுக்கர்பட்டி அகழாய்வில் தகவல்! - நம்பியாற்றங்கரை

Thulukkarpatti Phase 2 Excavation: நெல்லை துலுக்கர்பட்டி 2ஆம் கட்ட அகழாய்வில் சுமார் ஆயிரத்து 900க்கும் மேற்பட்ட அரிய வகையான வாழ்வியல் பொருட்கள் மற்றும் இரும்பு உருக்கு உலை களங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Thulukkarpatti Phase 2 Excavation
2000 வருடத்திற்கு முன்பே செல்வ செழிப்போடு வாழ்ந்த நெல்லை மக்கள்: அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புது தகவல்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 7:03 AM IST

2000 வருடத்திற்கு முன்பே செழிப்போடு வாழ்ந்த நெல்லை மக்கள்: அகழ்வாராய்ச்சியில் கிடைத்த புது தகவல்கள்... என்ன தெரியுமா?

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டி நம்பியாற்றங்கரை விளாங்காடு பகுதியில் 2ஆம் கட்டமாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் 1,900க்கும் மேற்பட்ட அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டி அருகே கண்ணநல்லூர் கிராமம் செல்லும் சாலையில் நம்பியாற்று படுகையில் பண்டைய மக்களின் வாழ்வியல் மேடு காணப்பட்டது. இப்பகுதி விளாங்காடு என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் இந்த அகழாய்வுப் பணியானது கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கியது.

முதற்கட்ட அகழாய்வில் செவ்வண்ணம், கருப்பு சிவப்பு வண்ண மண் பானை ஓடுகள், பழந்தமிழர் குறியீடுகள், இரும்பு ஆபரணங்கள், கண்ணாடி, அணிகலன்கள் போன்ற 1,009 அரிய வகையான தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. மேலும், இப்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் வெளிநாட்டினரோடு வணிகம் செய்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளும் கிடைத்திருந்தன.

அதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் 2ஆம் கட்ட அகழாய்வில் ஈமத்தாழிகள், ஈட்டி, மோதிரம், அணிகலன்கள், கண்ணுக்கு மை தீட்டும் செம்பிலான கருவி, இரும்பு உலிகள், செம்பிலான மோதிரம், வளையல்கள், யானை தந்தத்தினாலான அரிய வகை பொருட்கள், மான் கொம்பிலான கைப்பிடிகள், வெவ்வேறு அளவிலான ஆட்டக்காய்கள், சுடுமண்ணிலான காதணிகள், செம்பிலான புலி சின்னம் போன்ற 1,900க்கும் மேற்பட்ட அரிய வகை தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், 3 இரும்பு உருக்கு உலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2,400 வருடத்திற்கு முன்பு மக்கள் வாழ்ந்த வாழ்வியல் பொருட்களாகும் என கருதப்படுகிறது. இவற்றை டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்ப உள்ளதாகவும், இப்பகுதி இரும்புகால வாழ்விடப் பகுதியாக கருதப்படுவதால், இன்னும் பல அரிய வகை தொல்லியல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும், இப்பொருட்களை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக தொல்லியல் துறை இயக்குநர் வசந்தகுமார் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இங்கு இரும்பு உருக்கு தொழிற்கூடம் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இரும்பு உருக்கு உலைக்கான தளம், இரும்பு தாது பொருட்கள், இரும்பு தசடு, ஊதுழை குழாய், இரும்பு உளி வளையம் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நம்பியாற்றங்கரையில் செழிப்பான நாகரிகம் காணப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: இஸ்லாமிய கைதிகள் முன் விடுதலை; ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details