வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வழக்கத்துக்கு மாறாக ஜனவரி மாதம் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுவருகிறது. அதாவது தமிழ் மாதத்தை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் மார்கழி மாதம் அதிக பனிப்பொழிவு மட்டுமே இருக்கும். சில நேரங்களில் மட்டும் லேசான மழை பெய்வது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் மார்கழி மாதம் அதிக பனிப்பொழிவு இல்லாமல் இருந்தது. அதே சமயம் இரண்டாவது வாரத்திலிருந்து மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் தினமும் மாலை வேளைகளில் மட்டும் மிதமான மழை பெய்த நிலையில், ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக கடந்த 10ஆம் தேதி அதிகாலை முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனா, கொடுமுடியாறு உள்ளிட்ட 10 அணைகளும் நிரம்பின. மேலும் அண்டை மாவட்டமான தென்காசியில் உள்ள அணைகளும் நிரம்பின. இந்த அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தும் தாமிரபரணி ஆற்றை மையமாகக் கொண்டு மூன்று மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது.
வழக்கமாக மேற்கண்ட அணைகளிலிருந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டாலே கரையோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும். இச்சூழ்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் கடந்த நான்கு தினங்களாக அணைகளில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஜனவரி 12ஆம் தேதி அதிகபட்சம் 52 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
தொடர்ந்து ஜனவரி 13ஆம் தேதி நள்ளிரவு அதிகபட்சமாக 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. தற்போது மழை அளவு ஒரளவு குறைந்து வந்தாலும் கூட தொடர்ந்து அணைகளிலிருந்து சராசரியாக இருபதாயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் 7ஆவது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.