திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் நெல்லைக்கு வருகை தந்துள்ளனர். நேற்று அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி கல்லணை அரசு மகளிர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட மாணவிகள் பலர், பள்ளி மீது அடுக்கடுக்கான புகார்களை முன் வைத்தனர். குறிப்பாக, பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் ஷிப்ட் அடிப்படையில் கழிவறைக்குள் அனுமதிக்கப்படுவதாகவும், அதுவரை இயற்கை உபாதையை அடக்கி வைத்திருப்பதாகவும் வேதனையோடு தெரிவித்தனர்.
மேலும் இருக்கைகள் சரியில்லை, பள்ளி முன்பு ஓடும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கடிதமாக எழுதி குழுத் தலைவர் அன்பழகனிடம் மாணவிகள் வழங்கினர். மாணவிகளின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழுத் தலைவர் அன்பழகன், மாநகராட்சி அதிகாரிகளிடம் விபரத்தை கேட்டறிந்தார்.
குறிப்பாக, இப்பள்ளியின் முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. ஆனால் கால்வாய் ஓட்டம் இல்லாமல் தேங்கி கிடப்பதால் அதிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. சுமார் 1,200 மாணவிகள் பயின்று வந்த நிலையில், தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவிகள் வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டதாகத் தெரிகிறது.