திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம்திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மூன்றாவது மகள் சந்தியா (18). இவர் நெல்லை டவுன் கீழ ரத வீதியில் இயங்கி வரும் பேன்சி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் (அக் 2) கடைக்குத் தேவையான கூடுதல் பொருட்களை, அதே தெருவில் உள்ள குடோனில் இருந்து எடுக்கச் சென்றபோது அப்பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், நெல்லை டவுன் போலீசார் இளம்பெண் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். பின் கொலைக்கான காரணாம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், கொலை செய்த நபர் சம்பவ இடத்திலேயே கூர்மையான கத்தி போன்ற தடயங்களை விட்டுச் சென்றுள்ளார்.
ஏற்கனவே, அனுபவமில்லாத நபர்தான் இக்கொலையில் ஈடுபட்டிருக்க வாய்பு இருந்திருக்க முடியும் என போலீசார் கண்டறிந்தனர். குறிப்பாக, இளம்பெண் என்பதால் காதல் விவகாரமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் சந்தியாவின் தோழிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பக்கத்து கடையில் வேலை செய்து வந்த 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவன் சந்தியாவுடன் நெருங்கி பழகியதாகவும், நாளடைவில் சந்தியா அவனை வெறுத்தாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தியாவுக்கு அச்சிறுவன் காதல் தொல்லை கொடுத்ததாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. அச்சிறுவன் நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே தோப்பூரைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. எனவே, உடனடியாக மூலைக்கரைப்பட்டி போலீசார் தோப்பூர் சென்று தேடியபோது, அங்குள்ள காட்டுப் பகுதியில் அச்சிறுவன் பதுங்கியிருந்த நிலையில், அச்சிறுவனை கையும் களவுமாக பிடித்து வந்து டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளாது. இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. அதில் அச்சிறுவன் நெல்லை மாவட்டம் தோப்பூரைs சேர்ந்தவன் என தெரிய வந்துள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுள்ளான்.
காதல் விவகாரம்:நண்பர்கள் மூலம் டவுனில் தற்போது கொலை செய்யப்பட்ட சந்தியா வேலை பார்த்த கடைக்கு அருகில் அச்சிறுவன் வேலைக்கு சேர்ந்துள்ளான். அப்போது சந்தியாவை அடிக்கடி சந்திக்க நேரிட்ட நிலையில், ஒரு கட்டத்தில் சந்தியாவை விரும்பிய சிறுவன், அவரிடம் சென்று தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் சந்தியாவும் சிறுவனின் காதலுக்கு தலையசைத்தாக கூறப்படுகிறது. மேலும், ஆரம்பத்தில் சந்தியா சிறுவனுடன் நெருங்கி பழகிய நிலையில், திடீரென அச்சிறுவன் டவுனில் பார்த்து வந்த வேலையை உதறிவிட்டு, சென்னைக்கு வேலைக்காக சென்றுள்ளான். அதன் பிறகு சந்தியா திடீரென சிறுவனிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். மேலும், சிறுவன் சென்னைக்கு சென்ற பிறகு, சந்தியா வேறொரு நபரை காதலித்ததாகவும் கூறப்படுகிறது.
இதை அறிந்த சிறுவன், அடிக்கடி சந்தியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நிலையிலும், தனக்கு உன்னை பிடிக்கவில்லை என சந்தியா தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனக்கு கிடைக்காத சந்தியா வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்றும், எனவே சந்தியாவை கொலை செய்து விடலாம் என்று திட்டம் தீட்டியுள்ளான்.