திருநெல்வேலி : பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் திமுக 38 வார்டு செயலாளராக இருப்பவர் அபே மணி என்ற பொன்னுதாஸ் (38). ஆட்டோ ஓர்க் ஷாப் வைத்திருக்கும் இவர், இரவில் பணி முடிந்து வீடு திரும்பும்போது வீட்டின் வாசல் வரை பின்னால் ஆம்னி காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மணியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளனர்.
சத்தம் கேட்டு வந்த மணியின் தாயார் பேச்சியம்மாள் நடந்த சம்பவத்தை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இரவு 11 மணி என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. ஆனால், கூச்சல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து மணியின் உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, காவல் ஆணையாளர் துரைகுமார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டார்.
கொலைக்கான காரணம் என்ன?
மேலும், சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார். நடைபெறவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கொலை செய்யப்பட்ட மணியின் தாயார் பேச்சியம்மாள் போட்டியிட விருப்பமனு பெற்றுள்ளார். இந்த அடிப்படையில் நாளை (ஜன. 31) இதற்கான நேர்காணலில் தாயார் பேச்சியம்மாள் கலந்து கொள்ளவுள்ளார்.
எனவே நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலின், உட்கட்சி பூசலில் ஏற்பட்ட மோதலால் நடந்தது கொலையா அல்லது வரும் 1ஆம் தேதி பாளையங்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடையை பொன்னுதாஸ் குத்தகைக்கு எடுத்துள்ள நிலையில், தொழில் ரீதியாக ஏற்பட்ட பகையா என்ற அடிப்படையில் காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், கொலை நடந்த இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் வகாப், கொலை செய்யப்பட்ட மணியின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கொலைக்கு நிதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மூலம் எடுப்பதாக உறுதியளித்தார். கொலை செய்யப்பட்ட பொன்னுதாக்கு முருகம்மாள் என்ற மனைவியும் சுபேசன் மற்றும் சரண்யா என 2 குழந்தைகளும் உள்ளனர்.
இதையும் படிங்க : கத்தி முனையில் கொள்ளையடித்த எட்டு முகமூடி கொள்ளையர்கள் கைது