உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் சமீபத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் உ.பி. காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல், பிரியங்கா காந்தியை காவலர்கள் கீழே தள்ளிவிடுவது போன்ற காணொலியும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்டோர் வாயில் கறுப்புத் துணி கட்டியபடி அமைதி போராட்டம் நடத்தினர்.