கரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. எனவே பள்ளிகளில் சத்துணவு திட்டத்தால் பயன்பெற்றுவந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில், உலர் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு ஆகியவை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஊரடங்கு காரணமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு சாப்பிட்டுவந்த மாணவர்களுக்கு, ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் உலர் உணவுப் பொருள்கள் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 68 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர்கள் மையங்களில் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு அரிசி, பருப்பு வழங்கப்படவுள்ளன.