சரியாக கூறுவதென்றால் கடந்த 3ஆம் தேதி முதல் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருகிணைப்பாளர் சீமான், நடிகர் சரத்குமார், காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன், நல்லகண்ணு, தா. பாண்டியன் உள்ளிட்ட பல தலைவர்கள் கடந்த 15 தினங்களுக்கு மேலாக நாங்குநேரி தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நாங்குநேரி தொகுதியில் கூடாரமிட்டு கட்சி பணிகளை மேற்கொண்டனர்.
நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரை அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு கட்சிகளுமே தங்களது வேட்பாளரின் பெருமைகளை முன்நிறுத்தியும், எதிர் வேட்பாளரின் குறைகளை கூறியும் பரப்புரையை மேற்கொண்டனர். இதனை யடுத்து அதிமுக தங்களது ஆட்சியின் பெருமையையும், ஸ்டாலினின் மேல் உள்ள குற்றச்சாட்டுகளையுமே அனைத்து பரப்புரைகளிலும் தொடர்ச்சியாக முன்வைத்தது.
மேலும் தொகுதி மக்களின் தேவைகளை தாண்டி அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இரண்டு ஆண்டு எட்டு மாத ஆட்சி சாதனையே அதிகமாக முன்நிறுத்தப்பட்டன. அதிமுக அமைச்சர்கள் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து தொகுதியில் கூடாரமிட்டு அடிமட்ட தொண்டன் வரை தங்களது பணி சென்றடைவதை மிக எச்சரிக்கையாக கவனித்தனர். இந்த யுக்தி அதிமுகவின் அடிமட்ட தொண்டனை கூட சுறுசுறுப்பு அடையச்செய்தது என்பதை மறுக்கமுடியாத ஒன்று.
இதன் மறுபக்கம் திமுக, எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியின் குறைகளையும், அவர்களின் குற்றங்களையும் கூறுவதை தங்கள் முதல் பணியாக மேற்கொண்டனர். எதிர்க்கட்சியாக கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுகவிற்கு வேறு வழியில்லாத நிலையில் அதிமுக அமைச்சர்களின் ஊழல், மோசடிகள் குறித்தே திமுகவின் பரபரப்புகள் இருந்தன.
பரபரப்பின் போது, ஸ்டாலின், வைகோ போன்ற பெருந்தலைவர்களும் உளறிய சம்பவங்களும் அரங்கேறின. எது எப்படி இருப்பினும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இந்த தொகுதியில் பெரிதாக நம்பியிருப்பது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் செல்வாக்கைதான் என்பது இவர்களின் பரப்புரையின் போது நன்றாக வெளிப்பட்டது. அதனை உடைப்பதிலேயே அதிமுக அதிகம் கவனம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.