திருநெல்வேலி:பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரி நூற்றாண்டு நிறைவு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார்.
இந்த விழாவின்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். சந்திரயான் திட்ட இயக்குநரும், முன்னாள் இஸ்ரோ இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை விழாவில் கூறுகையில், ‘இந்த சவேரியார் கல்லூரியானது நூற்றாண்டுகளைக் கடந்து உள்ளது. நன்றியோடு பார்க்க வேண்டிய நாள் இது. நிலவு ஒவ்வொரு விநாடிக்கும், ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து வருகிறது.
1950 முதல் 1970 வரை 99 முறை வெளிநாடுகளால் நிலவுக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது. 2000ஆம் ஆண்டு வரை 40 வருடங்கள் நிலவுக்கு எந்த பயணங்களும் யாராலும் மேற்கொள்ளவில்லை. 2008ஆம் ஆண்டு இந்தியா நிலவிற்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அறிவித்தபோது இந்தியர்கள் நிலவில் போய் என்ன செய்யப் போகிறார்கள் என அனைவரும் சிரித்தார்கள். குறைந்த தொகையை வைத்து யாருமே அனுபவம் கொண்ட நபராக இல்லாமல் 99 கலன்கள் செய்யாததை சந்திரயான் திட்டம் மூலம் நாம் சாதித்துக் காட்டினோம்.
பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் மெல்ல மெல்லச் சென்று, நிலவின் துருவட்டப் பாதையை அடைந்த முதல் செயற்கைக்கோளாக சந்திரயான் பெயர் எடுத்தது. ராக்கெட்டில் இருந்து பிரிந்து 89 டிகிரி குளிரில் நிலவின் தென் துருவத்தை மூவர்ணக் கொடியுடன் கீழே இறங்கி நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்து, நிலவின் நீர் வரைபடத்தை உருவாக்கிய முதல் நாடாக இந்தியா திகழ்ந்தது.
அதன் விளைவாக, இன்றைய நாளில் நிலவை நோக்கி பல நாடுகள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன. சந்திரனுக்குச் செல்லும் திட்டத்தில் முதல் முறை தவறினோம். ஆனால், தற்போது விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கியது. 140 கோடி இந்தியர்களின் கனவை மெல்லச் சுமந்து சென்று ,அடுத்த தலைமுறையின் நம்பிக்கை விதையை விக்ரம் லேண்டர் விதைத்து உள்ளது.
நிலவில் நாம் குடி அமர்வோம். சீனா போன்ற மற்ற நாடுகள் எங்களோடு வந்து சேருங்கள் என சொல்லி வருகிறது. இந்தியா, உலக நாடுகளுக்கு தலைமை பொறுப்பேற்று நிலவில் குடியேறுவதற்கான வாய்பை உருவாக்கும். சந்திரயான் திட்டங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என்பதைத் தாண்டி தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும்.
நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடிக்க தவறிய நாடு, அமெரிக்கா. நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது, இந்தியா. அடுத்த தலைமுறைக்கான அமெரிக்காவை நிலவில் தென்துருவத்தில் கண்டுபிடித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு உள்ளது. நமது இளைஞர்கள் சரியானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிலவில் நீர் இருப்பு உள்ளிட்டவைகளை கண்டுபிடிப்பது விளையாட்டுக்காக அல்ல, போட்டிக்காக அல்ல, அடுத்த தலைமுறையின் நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
சர்வதேச விண்வெளி மையம் என்பது பூமியைச் சுற்றியுள்ள 400 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது. நான்கு, ஐந்து தலைமுறைகளை சர்வதேச விண்வெளி மையம் கடந்து விட்டது. ஒவ்வொரு 10, 15 வருடங்களுக்கும் ஒருமுறை அதன் ஆயுட்காலம் நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் அதனை பராமரிக்க வேண்டிய செலவு அதிகம்.