கல்வி, உளவுத்துறை இடையே ஒருங்கிணைப்பு இல்லை- செல்வப் பெருந்தகை பேட்டி திருநெல்வேலி:நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவரும், அவரது தங்கையும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு கல்வித்துறைக்கும் உளவுத்துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது தான் காரணம் என்று காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனியாண்டி - அம்பிகாபதி தம்பதியர். இவர்களின் 17 வயது மகன் அரசு பள்ளியில் படித்து வந்த நிலையில் அவருடன் படிக்கும் சக மாணவர்கள் கடந்த 9ஆம் தேதி இரவில் முனியாண்டியின் வீட்டுக்குள் புகுந்து மாணவரையும், அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டினர். சாதிய மோதல் காரணமாக நடைபெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாணவனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வ பெருந்தகை இன்று (ஆகஸ்ட்14) சிகிச்சை பெற்று வரும் மாணவனின் தாயை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க:15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: கடும் நடவடுக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன் விருதுநகரில் நடந்த பொழுதே நாம் அதை தடுத்திருக்க வேண்டும். இனி இது போன்ற சம்பவங்கள் தொடரக் கூடாது என கூறினார். மேலும் பள்ளி மாணவர்களை காவல்துறை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டு வர துடிக்கும் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில கருப்பு ஆடுகள் இது போன்ற சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பாக நெல்லையில் ஒரு மாணவன் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளான். இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க உளவுத்துறையும், கல்வித்துறையும் ஒருங்கிணைந்து மாணவர்களை கண்காணிக்க வேண்டும். வன்கொடுமை மண்டலமாக திருநெல்வேலியை அறிவிக்க வேண்டுமென என தொல்.திருமாவளவன் கூறியது வேறு கருத்து.
மேலும் உளவுத்துறைக்கும், கல்வித்துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது தான் இச்சம்பவத்திற்கு காரணம் எனவும் உளவுத்துறை இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எனவே அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இது போன்ற சம்பவங்களால் அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க:கோவையில் பெட்டிக்கடையில் வைத்து சட்டவிரோதமாக மது மற்றும் போதை பொருட்கள் விற்பனை!