திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக திமுக கட்சியைச் சேர்ந்த சரவணன் இருக்கிறார். அவருக்கும், பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டது. எனவே, அப்துல் வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக மேயர் சரவணனுக்கு எதிரான நடவடிக்கைககளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
இதனால் அப்துல் வஹாப்பின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார். அவர் மேயரிடம் பிரச்னை செய்யும் கவுன்சிலர்களை பலமுறை எச்சரித்தும், பிரச்சனை ஓய்ந்த பாடு இல்லை என்றே கட்சியினர் கூறுகின்றனர். எப்படியும் மேயரை மாற்றியே தீர வேண்டும் என அப்துல் வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக போர் கொடி தூக்கி வருகின்றனர்.
வெறும் உள்கட்சி பூசல் மட்டும் இல்லாமல், திருநெல்வேலி மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அந்த முறைகேடுகள் மூலம் கிடைக்கும் பணத்தை மேயர், கவுன்சிலர்களுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவேதான் மேயர் சரவணனை மாற்றிவிட்டு, தங்களுக்கு சாதகமான ஒருவரை மேயராக்க வேண்டும் என கவுன்சிலர்கள் முயற்சி செய்து வருவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், திருநெல்வேலியில் மேயரை மாற்றினால், ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவது மட்டுமல்லாமல், இதை முன்னுதாரணமாக வைத்து, அடுத்தடுத்து பல்வேறு மாநகராட்சிகளில் இது போன்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், திமுக தலைமை இதுவரை மேயருக்கு ஆதரவாகவே காய் நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது போன்ற நிலையில், 38 கவுன்சிலர்கள் மேயர் சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.