அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் நேற்று (டிச.17) முழுவதும் பெய்து வந்த இடைவிடாத கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையானது கொட்டி தீர்த்ததால் மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டி பகுதியில் 60 சென்டிமீட்டரை தாண்டி மழை பதிவாகி வருகிறது.
மேலும், இப்பகுதியில் தொடங்கிய மழை தற்போது வரை இடைவிடாது பெய்து வருவதினால், நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றிற்கு வரலாறு காணாத அளவில் 1.25 லட்சம் கன அடி தண்ணீரானது பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆறு மூழ்கிய படி தண்ணீர் பெருக்கெடுத்து மாநகர பகுதியில் ஓடுகிறது. இதனால் வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம், மணி மூர்த்தீஸ்வரம் டவுன் போன்ற பகுதிகள் கடுமையாக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
மேலும், நெல்லை களக்காட்டு பகுதியில் அமைந்துள்ள 49 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையானது, கனமழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கனமழையால் அணைக்கு சுமார் ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மீட்கப்பட்டு, பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பெல் ஸ்கூல் முகாமில், பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் பெய்து வரும் கனமழை காரணமாக, நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் நெல்லை ரயில் சேவை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில், கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் ஐஏஎஸ், நாகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, வருவாய் நிர்வாக ஆணையர் பனிந்தர்ரெட்டி, வருவாய் நிர்வாக இணை ஆணையர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வரும் நிலையில், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூரில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை... ஸ்தம்பித்த தூத்துக்குடி நகரம்!