நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, இந்திய அரசின் சார்பில் வரவேற்கும் பொறுப்பை தமிழ்நாடு முதலமைச்சரிடம் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியது பெருமை மிக்க விஷயமாகும். இதில் விருந்துக்கு முதலமைச்சர் வரவில்லை, மருந்துக்கு வரவில்லை என துரைமுருகன் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.
களக்காட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து சீமான் பேசியது தீவிரவாதத்தைத் தூண்டும் செயல். அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக அரசை பற்றி குறை கூற சீமானுக்கு தகுதி இல்லை. மைக் கிடைத்துவிட்டால் வீராவேசம் பேசுவதற்கு ராஜீவ் காந்தி ஒன்றும் சாதாரண மனிதர் அல்ல. அவர் இந்த நாட்டின் முன்னாள் பிரதமர். சீமான் பேச்சு கொழுப்பேறிய பேச்சு. இதுபோன்று பேசுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஊடகங்கள் சீமானைப் பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டும். சீமான் என்ன யோக்கியரா? அவர் குடியிருந்த வீட்டிற்கு 10 ஆண்டுகளாக வாடகை கொடுக்க வக்கில்லாதவர் சீமான். அவர் ஈழத் தமிழர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கொலைகாரர்கள், ரவுடிகளை வைத்து கட்சி நடத்துகிறார். ஈழப் பிரச்சனை குறித்து பேச தகுதியான ஒரே எதிர்க்கட்சித் தலைவர் வைகோ தான்’ என்று தெரிவித்தார்.
மேலும், ராஜீவ் காந்தி கொலை குறித்து பேசியதற்காக சீமான் மீது, வன்முறையைத் தூண்டுதல், தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.