அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருநெல்வேலி: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆண்டுவிழா மற்றும் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வெள்ளை அங்கி மருத்துவ உடை அணிவிப்பு விழா, சிறந்த மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று (செப்.28) கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார். பின்னர் முதலாம் ஆண்டு படிக்கும் 250 மாணவர்களுக்கும் அமைச்சர் வெள்ளை அங்கி அணிவித்து அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "நெல்லை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை 3000ல் இருந்து 4000 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள் மற்றும் வெளி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் மூலம், அரசு மருத்துவ சேவையை மக்கள் அதிகம் நம்ப தொடங்கியுள்ளனர். இந்த மருத்துவமனையில் 600 படுக்கையுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட கட்டிடம் ரூ.72 கோடியிலும், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் ரூ.23 கோடியிலும், கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், இந்த மருத்துவமனையின் துணை மருத்துவமனையாக கண்டிகைப்பேரியில் 35 கோடி ரூபாயில் 100 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. மிக விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மொத்தம் ரூ.178 கோடியில் நெல்லை மாவட்டம் முழுவதும், பல்வேறு மருத்துவக் கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 72 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி இலக்கு என அறிவித்தார். அதன்படி அதிக மருத்துவக்கல்லூரிகள் தொடங்கபட்டன. தற்போது வரை மருத்துவக்கல்லூரி இல்லாத ஆறு மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி கொண்டுவர முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
தினந்தோறும் அச்சுறுத்தலோடு வாழும் சூழல் மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரனா தற்போது பல உருவங்களில் பல விதமாக அச்சுறுத்தி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த செளமியா சுவாமிநாதன் வைரஸ் தொற்று முற்றிலும் ஒழியவில்லை இனி நாம் வைரஸ்களோடு போராடி தான் வாழ வேண்டும் என்றார். இருப்பினும் எந்த பேரிடர் வந்தாலும் அதை தடுக்கக் கூடிய ஆற்றல் தமிழ்நாடு மருத்துவக்கட்டமைப்புக்கும், தமிழ்நாடு மாணவர்களுக்கும் உண்டு" என்றார்.
இதையும் படிங்க:Karnataka Bandh: கர்நாடகாவில் இன்று பந்த்.. தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கம்!