நெல்லையில் சீரமைப்பு பணிகள் முடிந்து போக்குவரத்திற்கு அனுமதி திருநெல்வேலி:தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வரவாறு காணாத மழை பெய்ததால் கடுமையான வெள்ள பாதிப்புக்குள்ளாகியது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கருப்பன் துறை பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் சிதலமடைந்து பொதுமக்கள் பயணிக்க முடியாத நிலையில் இருந்தது. தொடர்ந்து மூன்று நாட்களாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று, மக்கள் போக்குவரத்திற்கு இன்று (டிச.26) அனுமதிக்கப்பட்டது.
இதனை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டு, மற்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக சரி செய்வதற்கான அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, “கடந்த வாரம் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. இதில், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 5 சாலைகள் மற்றும் பாலங்கள், விருதுநகர் மாவட்டத்தில் 13 இடங்கள், நெல்லை மாவட்டத்தில் 44 இடங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 113 இடங்களும் மழை வெள்ள பாதிப்புகளால் சேதம் அடைந்துள்ளது.
இதில், நெல்லை மாவட்டத்தில் பாதிப்படைந்த இடங்களில் 43 இடங்கள் சரி செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 44வது இடமாக இருந்த கருப்பு துறை பாலமும் தற்காலிகமாக சீர் செய்யப்பட்டு, தற்போது முதல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள தரைப்பாலங்கள், உயர் மட்ட பாலங்களாக மாற்ற வேண்டும் என்ற முதலமைச்சர் உத்தரவை தொடர்ந்து, கருப்பன் துறை பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாலத்திற்கான வரைபடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், கருப்பன் துறை பாலத்தின் அருகில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்க உருவாக்கப்பட்ட பாலம் பெரு வெள்ளத்தால் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால், தரைப் பாலத்தின் அருகில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, குழாய்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் சேதம் அடைந்த 108 இடங்களில் சாலைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் மீதமுள்ள ஐந்து இடங்களில் நடைபெறும் புனரமைப்புப் பணிகள் முடிவு பெற்று, நாளை முதல் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து தொடங்கும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணி நதியில், எட்டு இடங்களில் அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களாக ஓய்வு பெற்ற பொறியாளர்கள் உள்ளடக்கிய குழு, தாமிரபரணி நீர்வழிப் பாதை முழுவதும் ஆய்வு மேற்கொண்டு, மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் புதிய திட்டங்களை தயாரிக்க ஏற்பாடுகள் செய்துள்ளது. எனவே, இது குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து, அவர் அனுமதியுடன் புதிய திட்டத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
மேலும், இது அரசியல் பேச வேண்டிய நேரம் அல்ல, மக்களின் துயர் துடைக்க கூடிய நேரம். மக்களின் மனதை அறிந்து கொண்டு, அவர்களின் துயர் துடைப்பதுதான் அரசின் கடமை. முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து சென்றது மட்டுமல்லாமல், எங்களை தொடர்பு கொண்டு பேசுவது, நாங்கள் பணி செய்வதற்கு காணிக்கை போன்று உள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க:மறக்குமா நெஞ்சம்..! ஆழிப்பேரலையால் அதிர்ந்த தமிழகம்..! 19வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று!