தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நதியே நதியே...காதல் நதியே...' 'எனக்கு பிடித்தமான நதி தாமிரபரணி' - அமைச்சர் துரைமுருகன் சுவாரஸ்யப் பேட்டி! - அமைச்சர் துரைமுருகன் சுவாரஸ்ய பேட்டி

எனக்கு பிடித்தமான நதி தாமிரபரணி நதி, மனைவியை அழகு பார்க்கிறதுபோல தாமிரபரணி நதியை பொத்தி பொத்தி அழகு பார்க்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் சுவாரஸ்யப் பேட்டியளித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன்

By

Published : May 8, 2023, 10:31 PM IST

Updated : May 8, 2023, 11:11 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன்

திருநெல்வேலி:தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (மே 08) திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு பல்வேறு அரசு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். குறிப்பாக அவர், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆறு, கருமேனியாறு, நம்பியாறு ஆகிய மூன்று நதிகளை இணைக்கும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை நேரில் ஆய்வு செய்தார். முதல் கட்டமாக பரப்பாடியில் அவர் ஆய்வுமேற்கொண்டார். இறுதியாக பொன்னாக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம் தாமிரபரணி (பொருநை) ஆறு உற்பத்தியாகும் பகுதியில் உள்ள அணைகள் தூர்வாரப்படாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “எனக்கு மிகவும் பிடித்தமான நதிகளில் ஒன்று தாமிரபரணி. இந்த நதியின் பாசனம் அமைப்பு உட்பட அனைத்தும் எனக்கு பிடிக்கும். எனவே தான் 1989ஆம் ஆண்டில் இருந்து இந்த துறையை விடாமல் வைத்துக் கொண்டிருக்கிறேன். எப்படி பொத்தி பொத்தி மனைவியை அழகு பார்க்கிறோமோ, அதே போன்று தாமிரபரணி ஆற்றை அழகு பார்க்க வேண்டும்” என்று தனக்கே உரிய பாணியில் சிரித்த முகத்தோடு தெரிவித்தார்.

துரைமுருகன் தாமிரபரணி நதியை மிகவும் பிடித்த நதி என்று கூறுவதில் பல காரணம் உண்டு. ஏனென்றால் பொருநை ஆற்றங்கரை நாகரிகம், சுமார் 3ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று வரலாறுகள் கூறுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் கூட கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் இதை பெருமையோடு தெரிவித்தார். மேலும், பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தை சுட்டிக்காட்டி இந்திய துணை கண்டத்தின் வரலாறை தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் எழுத வேண்டும் என்று முதலமைச்சர் பெருமையோடு தெரிவித்தார்.

அப்படி புகழ்பெற்ற தாமிரபரணி நதி பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் இந்த நதியில் பல்வேறு பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன. ஆற்றங்கரையில் அழகான கோயில்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற பத்தமடை பாய் உற்பத்தி செய்ய பயன்படும் கோரைப் புற்கள், தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் வளர்கின்றன.

பல்வேறு பாரம்பரியத்தையும் இந்த நதி பறைசாற்றுகிறது. அதேபோல் உலகப் புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வா முன்பொரு காலத்தில் தாமிரபணி நதியில் இருந்து தண்ணீர் எடுத்து தான் செய்வதாக வரலாறு உண்டு. அதனால் தான் இருட்டுக் கடை அல்வாவுக்கு அதிக சுவை ஏற்பட்டு, இருட்டுக்கடை அல்வா உலக அளவில் புகழ்பெற்றதாகவும் வரலாறு கூறுகின்றது. இதுபோன்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தாமிரபரணி நதியை மூத்த அமைச்சர் துரைமுருகன் தனக்கு பிடித்தமான நதி என்று பெருமையோடு பேசியுள்ளார்.

இதையும் படிங்க:டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

Last Updated : May 8, 2023, 11:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details