தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொந்த ஊருக்கு செல்லும் கூடங்குளம் அணு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள்

திருநெல்வேலி : கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றிய வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள், தூத்துக்குடி மாவட்டம், நெல்லை மாநகர் பகுதியைச் சேர்ந்த பிற தொழிலாளர்கள் என மொத்தம் 1,332 பேர் சிறப்பு ரயில்கள் மூலம் பாட்னாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சொந்த ஊர் நோக்கி பயணிக்கும் கூடங்குளம் அணு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள்
சொந்த ஊர் நோக்கி பயணிக்கும் கூடங்குளம் அணு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள்

By

Published : May 13, 2020, 1:09 PM IST

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், சொந்த ஊர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 1332 பேர் நேற்று இரவு சிறப்பு ரயில்கள் மூலம் பீகார் மாநிலம் பாட்னாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள், பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர் . ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாத நிலையில், முன்னதாக சொந்த ஊர்களுக்கு தாங்கள் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர்.

இவர்களில் குறிப்பாக, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வடமாநிலத்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி தொடர்ந்து இவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இவர்களின் கோரிக்கைக்கு இணங்க, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு நேற்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

நெல்லை ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கூடங்குளம் அணு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள்

இதில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1,025 பேர், 31 அரசு பேருந்துகள், ஒரு டெம்போ வேன் ஆகியவற்றில் அணு மின் நிலையத்திலிருந்து நெல்லைவரை அழைத்து வரப்பட்டனர். இவர்களோடு நெல்லை மாநகர் பகுதியைச் சேர்ந்த 11 தொழிலாளர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 296 தொழிலாளர்கள் என மொத்தம் 1,332 பேர் அடங்கிய சிறப்பு ரயில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டது.

இவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து, நெல்லை மாநகர துணை காவல் ஆணையர் சரவணன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் பயணிகளை வழியனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, நெல்லை சந்திப்பில், ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதைகள் காவல் துறையினரால் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.

ரயிலில் பதிவு செய்யாத வடமாநிலத் தொழிலாளர்கள் பயணிக்காமல் தடுக்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வடமாநிலத் தொழிலாளர்கள் செல்வது குறித்த செய்திகளை சேகரிக்கவும், படம் எடுக்கவும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :மஸ்கட்டில் சிக்கித் தவித்த தமிழர்கள் சென்னை வருகை!

ABOUT THE AUTHOR

...view details