நீட் தேர்வுக்கு எதிராக திமுக செய்தது குறித்து பட்டியலிட்ட உதயநிதி ஸ்டாலின் திருநெல்வேலி: நெல்லை மத்திய மற்றும் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (அக்.27) நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள திரடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டிற்கு நிதியாக, நெல்லை திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ரூ.30 லட்சம் நிதியும், நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான் ரூ.25 லட்சம் நிதியும் வழங்கினார்.
இதேபோல நெல்லை மாநகர திமுக சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதியும், நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் ரூ.10 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல், வீரவாள், வெள்ளி பேனா, வெள்ளி செங்கல் உள்ளிட்டவைகளும் பரிசுகளாக வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் மாநாட்டில், நெல்லையில் இருந்து பெருந்திரளாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். 2007-ல் முதல் இளைஞர் அணி மாநாடு நெல்லையில் இரண்டு நாள் நடந்தது. இந்த மாநாட்டை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மு.க. ஸ்டாலினுக்கு நடத்துவதற்காக அனுமதியை வழங்கினார்.
இப்போது சேலத்தில் இளைஞரணி சார்பில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நமக்கு அனுமதியை வழங்கி உள்ளார். சேலத்தில் நடைபெறும் மாநாடு எப்படி நடக்க வேண்டும் என நெல்லையில் நடந்த மாநாட்டின் நிகழ்வுகளை பார்த்து தெரிந்து கொண்டிருக்கிறோம். நெல்லையில் பிரமாண்டமாக மாநாடு நடத்தப்பட்டது. அதைவிட சிறப்பாக சேலம் மாநாட்டை நடத்த திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் நடத்தப்பட்டது. எதற்கு அந்த மாநாடு நடத்தப்பட்டது என நடத்தியவர்களுக்கும் தெரியவில்லை, கலந்து கொண்டவர்களுக்கும் தெரியவில்லை. மாநாட்டில் முக்கிய பிரச்சினைகள் குறித்த எந்த தீர்மானமும், நிறைவேற்றப்படவும் இல்லை. தமிழகத்தில் ஆரியம், திராவிடம் இல்லை என ஆளுநர் சொல்கிறார்.
ஆளுநரின் கருத்து குறித்து பதில் சொல்ல நிறைய படிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லுகிறார். திராவிடத்தின் பெயரை தாங்கி உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், திராவிடம் குறித்து ஆளுநரின் கருத்துக்கு பதில் சொல்லவும் மறுக்கிறார்.
நீட் தேர்வுக்கு எதிராக தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு, எதையும் செய்யவில்லை என அனைவரும் சொல்கிறார்கள். சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி திறனை உயர்த்த, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த நுழைவு தேர்வு திட்டம் ரத்து செய்யப்பட்டது.
நீட் தேர்வில் உயிரிழந்த அனிதா தொடங்கி, சென்னையில் தற்போது ஒரு குடும்பமே உயிரிழந்து உள்ளது. நீட் தேர்வால் பலரை நாம் இழந்துள்ளோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரை, நீட் தேர்வுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கவில்லை. ஜெயலலிதா மறைந்த பின்னர், அடிமையாக இருந்த அதிமுக காலத்தில் நீட் தேர்வு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
நீட் தேர்வு வேண்டாம் என பல சட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, மக்கள் போராட்டமாக இனிமேல் அது மாற வேண்டும். பிரதமர் மோடி நாட்டில் எங்கு சென்றாலும் என்னைப் பற்றியும், திமுக பற்றியும் பேசி வருகிறார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்பம் மட்டும்தான் வளர்ந்து வருவதாக தெரிவிக்கிறார். ஆம் அது உண்மைதான். தமிழகம் எனும் ஒரு குடும்பம் மட்டும்தான் வாழ்கிறது. தேர்தல் அறிக்கையில் சொன்னதையும், சொல்லாததையும் திமுக ஆட்சியில் தமிழக முதலமைச்சர் திட்டமாக கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறார்.
9 ஆண்டு பாஜக ஆட்சியின் அனைத்து ஊழலும் சி.ஏ.ஜி வெளியிட்ட ஒரு அறிக்கையில் வெளியே வந்துவிட்டது. ரமனா படத்தில் இறந்த மனிதருக்கு சிகிச்சை செய்வதைப் போல, திரையில் வரும் காட்சியை போல் நிஜத்தில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்ததாக அயூஸ்மான் பாரத் திட்டத்தில் மத்திய அரசு செய்துள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!