நெல்லை மாவட்டத்தில் இடைவிடாது வெளுத்து வாங்கும் மழை: மூலைக்கரைப்பட்டியில் 20 செ.மீ மழைப்பதிவு! - flood due to continous rain in tirunelveli
Tirunelveli Rainfall Details: நெல்லை மாவட்டத்தில் இடைவிடாது வெளுத்து வாங்கும் மழையால் மூலைக்கரைப்பட்டி, செட்டிகுளம், கூடங்குளம், மீட்டார் குளம் ஆகிய பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்றைய நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலைக்கரைப்பட்டியில் 20 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இடைவிடாது வெளுத்து வாங்கும் மழை
நெல்லை மாவட்டத்தில் இடைவிடாது வெளுத்து வாங்கும் மழை
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் இடைவிடாது மழை வெளுத்து வாங்கி வருவதனால், சாலைகளில் இடுப்பளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், செட்டிக்குளம் கிராமம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக மாறியுள்ளது.
அரபிக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று(டிச.16) இரவு முதல் இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தின் பிரதான அணைகள் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொட்டி தீர்க்கும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
இடைவிடாது பெய்யும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைப் பகுதிகளில் இன்று(டிச.17) காலை முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது. நம்பியாறு அணைப் பகுதியில் 185 மி.மீ மழைப் பதிவானது.
இதன் காரணமாக நம்பியாறு மற்றும் அனுமன் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்திலுள்ள செட்டிகுளம், கூடங்குளம், மீட்டார் குளம் போன்ற பகுதிகளில் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக செட்டிகுளத்தில் சாலைகளில் இடுப்பளவிற்குத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். திசையன்விளை, கூடங்குளம் பகுதிகளிலும் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தண்ணீரில் மிதந்தபடி ஆபத்தான முறையில் சாலையைக் கடந்து செல்கின்றனர்.
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியேச் செல்லும் பாதசாரிகளும் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்துடன் செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல் நெல்லை மாநகர பகுதிகளான பாளையங்கோட்டை அடுத்த மனக்காவலம், பிள்ளைநகர் பேட்டை, மேலப்பாளையம் போன்ற பகுதிகளிலும் பல்வேறு வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து இடைவிடாமல் மழை நீடித்து வருவதால் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 30ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று(டிச.17) காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலான நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சம் மூலைக்கரைப்பட்டியில் 20 செ.மீ., மழைப் பதிவாக இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது. இன்றைய நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழைப்பொழிவு பின்வருமாறு: