திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள், நெல்லை மாவட்டம் மேலத் திடீயூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தங்கி இருந்தபடி கட்டிடப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் இவர்கள் தங்கி வேலை செய்து வந்த நிலையில், நேற்று(நவ.12) தீபாவளி பண்டிகை என்பதால் தொழிலாளர்கள் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை பகுதியைச் சேர்ந்த ஜூலியஸ் குமார்(42) என்பவரை சக தொழிலாளர்கள் அரிவாளால் முகம், கழுத்து, கை, கால் ஆகிய பகுதிகளில் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதையடுத்து இன்று(நவ.13) காலை ஜூலியஸ் குமார் சடலமாக கிடப்பதை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டு முன்னீர்பள்ளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ஜூலியஸின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சக கட்டிடத் தொழிலாளர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.