மதுரை மண்டல சிறைத்துறை டிஐஜி பழனி செய்தியாளர் சந்திப்பு திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையானது நூற்றாண்டு பழமையான சிறைச்சாலை ஆகும். சுமார் 118 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலையில், விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் என சுமார் ஆயிரத்து 400 பேர் உள்ளனர். இதில் தண்டனைக் கைதிகள் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஏற்கனவே சிறைச்சாலையில் பேக்கரி வகை இனிப்புகள் செய்யும் கூடம், காகிதக் கவர்கள் தயாரிக்கும் தொழில், தச்சுப் பட்டறை தொழில் கூடம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு ஆகியவை நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்களை விற்பதற்கு சிறைத்துறை அங்காடியும், பாளையங்கோட்டை சிறைச்சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறைச்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், இந்த அங்காடி மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சிறை வளாகத்தில் உள்ள 12 ஏக்கர் விவசாய நிலத்தில் பல்வேறு வகையான சாகுபடி பணிகளும் தண்டனைக் கைதிகளால் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் விவசாயத் துறை சார்பில், ''வீரியமிக்க வம்பன் 18'' என்ற உளுந்து பயிர்கள் விதைக்கும் பணி இன்று (ஏப்ரல் 27) சிறை வளாகத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் நடைபெற்றது.
இதனை மதுரை மண்டல சிறைத்துறை டிஐஜி பழனி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தண்டனைக் கைதிகள் முதல் கட்டமாக சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் உளுந்து விதைகளை விதைத்தனர். மேலும், இங்கு உள்ள தண்டனைக் கைதிகளுக்கு வருவாய் பெருக்கும் பயிற்சி அளிக்கும் விதமாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப உதவி உடன் பயிற்சிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிறைத்துறை டிஐஜி பழனி, “சிறைக் கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில், அவர்களுக்கு சிறை அங்காடி மற்றும் விவசாயம் பார்ப்பது போன்ற நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். அந்த வகையில், இன்று உளுந்து விதைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கழிவறை உள்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் சாதி ரீதியாக கைதிகள் பிரித்து வைக்கப்படுவதாக பல ஆண்டுகளாக நிலவும் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, “கைதிகளின் பாதுகாப்புக் கருதி, விசாரணைக் கைதிகளை மட்டும் பிரித்து வைத்துள்ளோம். தண்டனை பெற்ற கைதிகளால் இந்தப் பிரச்னை ஏற்படுவதில்லை. சாதிய மோதலைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே கைதிகள் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்” என டிஐஜி பழனி பதில் அளித்தார்.
இதையும் படிங்க:பல் பிடுங்கிய விவகாரம்: கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சிபிசிஐடி அதிரடி விசாரணை!