திருநெல்வேலி: அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, மானூர் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களுக்கு கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணி அளவில் தொடங்கியது.
ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தலா ஒரு மையம் என மொத்தம் ஒன்பது வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வாக்கு எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது.
கள நிலவாரம் குறித்து நமது செய்தியாளர் மொத்தம் இரண்டாயிரத்து 917 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காக ஒன்பது வாக்கு எண்ணும் மையங்களிலும் மொத்தம் 675 மேசைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
வாக்கு எண்ணிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் இரண்டாயிரத்து 69 பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு வேகமாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆனால் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை முடிவதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மொத்தம் ஐந்தாயிரத்து 522 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் வெற்றிபெறும் வேட்பாளர்கள் விரைவில் தாங்கள் போட்டியிட்ட பதவிக்கான பொறுப்பை ஏற்க உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவர் ஒருவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் ஒருவர், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஒன்பது பேர், துணைத் தலைவர் பதவிக்கு ஒன்பது பேர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு 204 பேர் என மொத்தம் 224 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் தடுக்க மொத்தம் மூன்றாயிரத்து 500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வேட்பாளர்களின் வெற்றியைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களின் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை