திருநெல்வேலி:மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் நேற்று (ஜூலை 23) சுமார் 4 மணி நேரம் தேசிய புலனாய்வு அமைப்பினர் (NIA) சோதனை நடத்தினர். சோதனை முடிந்த பிறகு நெல்லை முபாரக் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, 'எனது வீட்டில் அதிகாலையில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த சோதனை நடத்தப்பட்டது.
இன்றைக்கு மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தியாவில் தேசிய புலனாய்வு பிரிவை முன்னிறுத்தி அரசியல் செய்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நம்புகிற பாஜக அரசினுடைய ஏவல் துறையான என்ஐஏ மூலமாக இந்த நடவடிக்கை ஏவப்பட்டு இருக்கிறது.
தஞ்சையில் நடத்தபட்ட ராமலிங்கம் கொலைக்கும் எஸ்டிபிஐ கட்சிக்கும் துளியும் சம்பந்தமில்லாத இந்த வழக்கில் இன்றைக்கு ஒரு உள்நோக்கத்தோடு காழ்ப்புணர்வோடு இதை சோதனை நடந்துள்ளது. இதை எஸ்டிபிஐ சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும். இது போன்ற பொய் வழக்குகளுக்கோ இதுபோன்ற பொய்யான ரைடுகளுக்கோ கட்சியினுடைய பெயரை களங்கம் விளைவிக்க நினைத்தால் அதற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி மக்களைத் திரட்டி போராடும்.
இந்த பொய் வழக்குகளில் இருந்து எஸ்டிபிஐ கட்சியினர் விடுதலை நிச்சயமாக சட்டப்பூர்வமான முறையில் நாங்கள் வந்து இதிலிருந்து வெளிவருவோம். இன்றைக்கு என்னுடைய வீட்டிலிருந்து ஒன்றையும் அவர்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை. அதுபோக காலை 5.45 மணியிலிருந்து அவர்கள் எந்த விதமான ஆதாரங்களையும் அவர்கள் காட்டிய வழக்குக்கு ஆதாரமாக எடுத்துச்செல்ல இயலாத நிலையில் உள்ளனர்.
ஊடகங்களுக்கெல்லாம் செய்தி பரவிவிட்டு செய்கிற அடிப்படையில் ஒரு காழ்ப்புணர்வோட என்னுடைய செல்போனை மட்டும் தான் கொண்டு சென்று இருக்கிறார்கள். இதனை சட்டப்பூர்வமான முறையில் எதிர்கொள்ளும். எவ்வாறு இன்றைக்கு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அமலாக்கத்துறையின் மூலமாக முடக்க நினைக்கிறதோ, அதுபோல என்ஐஏ மூலமாக எஸ்டிபிஐ கட்சியை முடக்க நினைக்கிறார்கள். மக்கள் விரோத பாரதிய ஜனதா அரசினுடைய நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் நாங்கள் அம்பலப்படுத்துகிறோம் என்ற காரணத்திற்காக எஸ்டிபிஐ கட்சியின் மீது இந்தப் பழி அவதூறு சுமத்தப்படுகிறது.
இந்த சோதனை மூலமாக இன்றைக்கு அவர்கள் அதை நிரூபிக்க நினைக்கிறார்கள். எங்களை அச்சம் ஏற்படுத்த நினைக்கிறார்கள். ஒருபொழுதும் எஸ்டிபிஐ கட்சி இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அச்சமடையாது. மக்களுக்காக எங்களது போராட்டம் எப்பொழுதும் தொடர்ந்து நடக்கும். என்ஐஏவினுடைய முகத்திரை என்ன என்பதை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் எஸ்டிபிஐ கட்சி கிழித்தெறியும்.