சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் எம்.எல்.ஏ அன்பழகன் பேட்டி திருநெல்வேலி:அரசு சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் முடிவு பெற்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் தலைமையிலான உறுப்பினர்கள் ஆறு பேர் நேற்று (ஆகஸ்ட் 16) ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் பாளையங்கால்வாய் அரசு ஆதிதிராவிடர் நல விடுதி பத்திரப்பதிவு துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த குழு ஆய்வு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் தலைவர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், “ தமிழக அரசின் முக்கியமான குழுக்களில் ஒன்றான மதிப்பீட்டு குழு நெல்லை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில் சிறப்பான முறையில் நெல்லை மாவட்டத்தில் பணி செய்யப்பட்டுள்ளது. ஒரு சில குறைகளை கண்டறிந்தோம் அதனையும் உடனடியாக சரி செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். நிலை மேலப்பாளையத்தில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது அதிகமான நபர்கள் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாடுகளால் அதிக அளவு பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டை அப்பகுதி மக்கள் முன் வைத்தார்கள். ப்ளூ கிராஸ் உறுப்பினர்களுடன் இணைந்து நாய் கடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் இருந்து பிரிந்து செல்லும் கிளைக்கால்வாயான பாளையங்கால்வாய் பகுதியை குழு ஆய்வு மேற்கொண்டது அதிகமான அளவு அமலை செடிகள் கால்வாயை ஆக்கிரமித்து உள்ளதை கண்டறிந்தோம். உடனடியாக அதனை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் தங்கும் விடுதி ஆய்வு செய்து ஒரு சில குறைகள் கண்டறியப்பட்டது உடனடியாக அதனை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உலமா பணியாளர்களும் இனி மானிய விலையில் டூவீலர் வாங்கலாம் - வேலூர் ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!
விடுதியில் சமையலுக்காக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. உடனடியாக அதிகாரிகள் அறிவுறுத்தி அந்த இயந்திரங்களை உபயோகப்படுத்த அறிவுறுத்த வேண்டும். பல லட்சம் செலவு செய்து பொருட்களை கொடுத்தால் அதனை பயன்படுத்துவதாக தான் அரசு நினைக்கிறது ஆனால் அதனை உபயோகப்படுத்தாமல் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.
கிராமத்தில் இருந்து வந்து படித்து பெரியாட்களாக வரவேண்டிய ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதியை முறையாக பராமரித்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் சந்திக்கிறோம். எதிர்காலத்தில் நாங்குநேரி பகுதியில் நடந்த சம்பவத்தை போல் எந்த பிரச்சனையும் வராமல் இருப்பதற்கு மாவட்ட ஆட்சியரும் அதிகாரிகளும் நடவடிக்கைகளை செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சரும் அதனையே அறிவுறுத்தியுள்ளார்.
பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நெல்லை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு மண்டலங்களில் 300 கோடி ரூபாய்க்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 633 கோடி ரூபாய்க்கு ஒப்பந்த புள்ளிகள் புதிய பணிகளுக்காக விடப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியில் முழுமையாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் இன்னும் ஒரு வருடங்களில் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என தெரிவித்தார்.
சட்டமன்ற மதிப்பீட்டு குழுவின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய குழுவின் உறுப்பினரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாயிருல்லா, “சித்தா பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கு சட்டமன்றத்தில் சட்டமன்ற முடிவு நிறைவேற்றப்பட்டு ஆளுநர் அதனை பல மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறை சித்த மருத்துவ முறை சித்த மருத்துவமனையை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்த சட்ட முன்னறிவு கொண்டு வந்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:நிலையற்ற நூல் விலை: பின்னலாடை தொழிலில் பின்னடையும் அபாய நிலையில் தமிழகம்!