பஞ்சாயத்து உறுப்பினர் வெட்டி கொலை திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (32). இவர் கீழநத்தம் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டு உறுப்பினராக உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. வீட்டில் உள்ள கால்நடைகளை அப்பகுதியில் இருக்கும் பாலம் அருகே மேய்ச்சலுக்கு விட்டு மீண்டும் வீட்டிற்கு கொண்டு சென்று கட்டுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.
அதேபோல் நேற்று (ஆகஸ்ட் 13) மாலை மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளை வீட்டிற்கு கொண்டு சென்று கட்டுவதற்காக அப்பகுதிப் பாலத்தில் இருந்து செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ராஜாமணியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் ராஜாமணியை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட ஊரக உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மூதாட்டியை மிரட்டி 100 சவரன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு... உறவினரே கைவரிசை காட்டியதாக புகார்!
ராஜாமணி வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் மருத்துவமனை அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது உடன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில், அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை குற்றவாளிகள் தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சமீபத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்மத்தால் பள்ளி மாணவன் சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது போன்ற சூழ்நிலையில் நேற்று மேலும் ஒரு கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த கொலையும் இரு வேறு சமூகம் சார்ந்த பிரச்சனையாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க:மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் கலந்த விவகாரம்.. முதன்மை கல்வி அதிகாரியின் முடிவு என்ன?