திருநெல்வேலி மாவட்டம், அம்பை அடுத்த பாபநாசம் அருகே இருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் மூலஸ்தனமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவசை திருவிழாவின்போது, பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, குடிசைகள் அமைத்து தங்கி, தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷப், அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குநர் செண்பக பிரியா, அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ் மற்றும் வருவாய்த்துறை வனத்துறை, காவல்துறை அலுவலர்கள் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் குடிசைகள் அமைப்பது மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.