திருநெல்வேலி: என்.ஜி.ஓ காலனியில் பாஜக சார்பில் மாநில அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு கூட்டம் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "என் மண் என் மக்கள் யாத்திரை எழுச்சியாக அமைந்துள்ளது. கடை கோடி கிராமம் வரை மத்திய அரசின் திட்டம் சேர்ந்துள்ளது இந்த யாத்திரையின் மூலம் தெரிய வந்துள்ளது.
முதற்கட்ட பயணம் இன்றைய தினம் நெல்லை சட்டமன்ற தொகுதியோடு நிறைவு பெறுகிறது. இரண்டாம் கட்ட பயணம் அடுத்த மூன்றாம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடக்கிறது. அந்த பயணத்தில் 36 தொகுதிகளை உள்ளடக்கி யாத்திரை அமைந்திருக்கிறது. 5 கட்டமாக இந்த பயணம் வடிவமைக்கப்பட்டு ஜனவரி பதினொன்றாம் தேதி நிறைவு பெறுகிறது. முதல் பகுதி 9 கிலோ மீட்டர் தூரம் திட்டமிடப்பட்டது, அடுத்த கட்டமாக நடைபெறும் பயணத்தில் 12 கிலோ மீட்டர் தூரம் என மாற்றப்பட்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு இ-பாக்ஸ் லேர்னிங் திட்டத்தை நிறுத்தினார்கள், நீட்ட பற்றி போலியான கட்டமைப்பை இன்னும் ஆக்ரோசமாக திமுக பேசி வருகிறது. 2021-ஆம் ஆண்டை விட நீட் தேர்வு இந்த ஆண்டு சிறப்பாக மாணவர்களால் எழுதப்பட்டுள்ளது. திமுக, கட்சி கொள்கைகளை அரசு திட்டங்களிலும் திணித்து வருகிறது. நீட்டை வைத்து அரசியல் செய்து வரும் திமுக தற்போது இடியாப்ப சிக்கலில் சிக்கி உள்ளது.
திமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு சாதாரண மக்கள் யாரும் செல்லவில்லை, ஆளுங்கட்சி மாநில அளவில் நடத்தும் போராட்டம் என்றால் மாநிலமே ஸ்தம்பித்திருக்க வேண்டும். மக்கள் அந்தப் போராட்டத்தை புறக்கணித்து விட்டனர். ஆளுநர் பதவி தொடர்பாக பேசும் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பதவியை துறந்து விட்டு குரூப் 4 தேர்வை எழுதி பிக்சிங் இல்லாமல் பாஸ் செய்யட்டும் பார்ப்போம்.