திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கல்வி சார்ந்த நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் புதிய துறைகளுக்கான பாடத்திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் துறை சார்ந்த பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
நிலைக்குழுவில் சுமார் நூறு உறுப்பினர்கள் உள்ள நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 50 முதல் 60 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதற்கிடையில் நிலைக்குழு கூட்டத்தில் பாடத்திட்டங்கள் குறித்த சந்தேகங்களுக்கு பேசுவதற்கு பேராசிரியர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவசர அவசரமாக கூட்டம் முடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அதாவது வழக்கமாக இது போன்று நிலைக்குழு கூட்டம் மூன்று மணி நேரம் வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்று அரை மணி நேரத்தில் கூட்டம் முடிவு பெற்றது. அதேபோல், வழக்கமாக நிலைக் குழு கூட்டத்தில் பாடத்திட்டங்கள் குறித்து துறைவாரியாக பேராசிரியர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும், இன்று நடைபெற்ற கூட்டத்தில் அந்த அனுமதி வழங்கப்படவில்லை என்றும் பேராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேபோல், தமிழக அரசின் உயர் கல்வித்துறை தயாரித்துள்ள பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்களில் அமல்படுத்துவது தொடர்பான முன்வடிவுக்கும் ஒப்புதல் பெறப்பட்டது. அதே சமயம், உயர் கல்வித்துறை தயாரித்துள்ள பாடத்திட்டத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகவும், எனவே அந்த பாடத்திட்டத்தை பாடத்திட்ட நிர்ணயக் குழு நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, நிராகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை நிலைக்குழு கூட்டத்தில் அங்கீகரித்தது ஏன் என்று பேராசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தியாவில் முதல்முறையாக மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய தொல்லியல் துறை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த துறைக்கான ஒப்புதலும் இன்றைய கூட்டத்தில் பெறப்பட்டது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''இந்த கல்வி ஆண்டில் இளங்கலை பாடப்பிரிவில் மூன்று புதிய பாடப்பிரிவுகளும் முதுகலைப் பாடப்பிரிவில் இந்தியாவில் முதல்முறையாக அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுடன் கூடிய தொல்லியல் துறை படிப்பும் அப்ளைடு பிசிக்ஸ் பாடப்பிரிவும்; இந்த கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.