நெல்லை: பாபநாசம் வி.கே. புரம் அணவன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். நாளை (ஜனவரி 14) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கரும்பினை வியாபாரிகள், அரசுக்கு விற்பனை செய்துவருகின்றனர்.
அரசு நிர்ணயித்த விலை கரும்பு விவசாயிகளுக்குக் கிடைக்கிறதா?
குறிப்பாக பாபநாசம் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அதிகளவு கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் கரும்பு வெட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. பல்வேறு வியாபாரிகள், இடைத்தரகர்கள் நேரடியாக இங்கு வந்து கரும்பினை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், அரசு நிர்ணயித்த விலை கரும்பு விவசாயிகளுக்குக் கிடைக்கிறதா என்று ஈடிவி பாரத் சார்பில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தால் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடும் ஏமாற்றம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் கொள்முதல் விலையாக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.
இடைத்தரகர்களால் விவசாயிகள் பாதிப்பு
கூட்டுறவு அலுவலர்கள் நேரடியாக விவசாயிகளை அணுகி அரசு நிர்ணயித்த விலைக்குக் கரும்பினை வாங்காமல் இடைத்தரகர்கள் மூலம் கரும்புகளை வாங்குகின்றனர். எனவே இடைத்தரகர்கள், அலுவலர்கள், தங்களுக்கான தரகுத் தொகை போக கரும்பு ஒன்றுக்கு 13 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு கொடுக்கின்றனர். இதனால் விவசாயிகளுக்குக் கடும் இழப்பு ஏற்படுகிறது, அதேபோல் கட்டு ஒன்றுக்கு 230 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
இதற்கிடையில் அரசு வாங்கும் விலைக்கே தனியார் வியாபாரிகளும் கரும்பினை வாங்குவதால் வெளிச்சந்தையிலும் போதிய லாபத்துடன் விற்க முடியாமல் விவசாயிகள் கடும் துயரத்தில் உள்ளனர். இது குறித்து விவசாயி லட்சுமண பாண்டியன் நம்மிடம் கூறுகையில், ”எங்கள் பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிட்டுள்ளோம். கடந்த ஆண்டில் மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு மழை இல்லாவிட்டாலும்கூட நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்கவில்லை.
அரசு ஒரு கரும்புக்கு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் இடைத்தரகர்கள் மூலம் கரும்பு வாங்கப்படுவதால் எங்களுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை. தற்போது கரும்புக் கட்டு ஒன்றுக்கு 230 ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர். இதே விலைக்குதான் தனியார் வியாபாரிகளும் வாங்குகின்றனர். ஒரு ஏக்கருக்குக் கரும்பு பயிரிட 80 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் ஒரு ஏக்கரில் 600 கட்டுக்கும் குறைவாகவே கரும்பு விளைகிறது. போதிய லாபம் கிடைப்பதில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
அரசு நிர்ணயித்துள்ள விலை கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கிறதா ? - இடிவி பாரத் சார்பில் நேரடி கள ஆய்வு வியாபாரிகளுக்கு லாபம் இதேபோல் மற்றொரு விவசாயி அருண் பாண்டி கூறுகையில், ”தமிழ்நாடு அரசு நிர்ணயித்த விலை எங்களுக்குக் கிடைப்பதில்லை, ஏற்கனவே கரும்பு விளைவிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. யானைகள், கரடிகள், காட்டுப் பன்றிகள் போன்ற விலங்குகளின் அட்டகாசத்தால் அதிகப்படியான கரும்புகள் அழிந்துவிடுகின்றன. அதையும் தாண்டி கரும்பு உற்பத்தி செய்தால் போதிய விலை கிடைப்பதில்லை" என்று தெரிவித்தார்
அதேசமயம் விவசாயிகளிடம் ஒரு கட்டு 230 ரூபாய்க்கு கரும்பினை வாங்கி அதை வியாபாரிகள் வெளிச்சந்தையில் 400 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இது குறித்து வியாபாரி சுப்பையா நம்மிடம் கூறுகையில், "இந்தாண்டு கரும்பு விற்பனை சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம், ஒரு கரும்பு தனியாக முப்பது ரூபாய்க்கு விற்கப்படுகிறது" என்று தெரிவித்தார். வழக்கமான பிற விவசாய பொருள்களைப் போன்று கரும்பு விவசாயமும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: 'இப்பிடிதாங்க மாடு பிடிக்கணும்..' - ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடிப்பதற்கான விதிமுறைகள்